“வாளேந்திய துறவி” – குரு கோவிந்த் சிங் ஜெயந்தி 2025: வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

guru gobind singh jayanti 2025 history significance khalsa 5ks tamil spirituality

சீக்கிய மதத்தின் பத்தாவது குருவும், ‘கல்சா‘ (Khalsa) படையை உருவாக்கியவருமான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாள் (Guru Gobind Singh Jayanti) இன்று (டிசம்பர் 27, 2025) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆன்மிகத் தலைவராக மட்டுமல்லாமல், அநீதிக்கு எதிராகப் போராடிய ஒரு மாவீரராகவும் இவர் போற்றப்படுகிறார்.

யார் இந்த குரு கோவிந்த் சிங்?

ADVERTISEMENT

1666-ம் ஆண்டு பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த இவர், தனது 9-வது வயதிலேயே குருவாகப் பொறுப்பேற்றார். முகலாய மன்னர் ஔரங்கசீப், இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்தியதை எதிர்த்ததால், இவரது தந்தை குரு தேக் பகதூர் கொல்லப்பட்டார். தந்தையின் தியாகத்திற்குப் பிறகு, அநீதியை எதிர்க்க ஆன்மிகத்தோடு வீரமும் தேவை என்பதை உணர்ந்து, சீக்கியர்களை ஒரு போர்வீரர் சமூகமாக மாற்றினார்.

‘கல்சா’வும் 5 தாரக மந்திரங்களும்:

ADVERTISEMENT

1699-ம் ஆண்டு பைசாகி நாளன்று, “தலை கொடுக்க யார் தயார்?” என்று கேட்டு, முன்வந்த ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து ‘பஞ்ச பியாரே’ (ஐந்து அன்புக்குரியவர்கள்) என்று அழைத்தார். சாதி, மத பேதமின்றி அனைவரையும் சமமாக பாவிக்கும் ‘கல்சா’ (Khalsa – தூய்மையானவர்கள்) அமைப்பைத் தொடங்கினார்.

ஒவ்வொரு சீக்கியரும் கட்டாயம் அணிய வேண்டிய ‘ஐந்து க’கரங்களை’ (5 Ks) அறிமுகப்படுத்தியவர் இவரே:

ADVERTISEMENT

கேஷ் (Kesh): வெட்டப்படாத முடி (ஆன்மிகத்தின் அடையாளம்).

கங்கா (Kangha): மரச் சீப்பு (தூய்மை).

கரா (Kara): இரும்பு காப்பு (கடவுளுடனான பிணைப்பு).

கச்சரா (Kachera): உள்ளாடை (ஒழுக்கம்).

கிர்பான் (Kirpan): சிறிய வாள் (அநீதியை எதிர்க்கும் தைரியம்).

நிரந்தர குரு:

தனிமனித வழிபாட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய அவர், தனக்குப் பிறகு மனித வடிவில் குரு இருக்க மாட்டார்கள் என்றும், புனித நூலான ‘குரு கிரந்த சாகிப்’ (Guru Granth Sahib) என்பதே நிரந்தர குருவாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

“நான் எளியவர்களின் சேவகன்” என்று வாழ்ந்த குரு கோவிந்த் சிங், தன் நான்கு மகன்களையும் மதத்துக்காகவும், நீதிக்காகவும் தியாகம் செய்தவர். அவரது பிறந்த நாளான இன்று, தைரியம் மற்றும் சமத்துவத்தை எங்கும் பரப்ப உறுதி ஏற்போம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share