மும்பை அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. Gujarat Titans beat Mumbai
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத், மும்பை அணிகள் மோதிய போட்டி நேற்று (மார்ச் 29) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர். சுப்மன் கில் 27 பந்துகளில் 37 ரன்களுடன் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 24 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஜோஸ் பட்லர் வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன், 18-ஆவது ஓவரில் 63 ரன்களுடன் வெளியேறினார். ரஷித்கான், ஷாருக்கான் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி நடையை கட்டினர். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகள், போல்ட் சஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
197 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா, ரிக்கில்டென் ஆகியோர் களமிறங்கினார். முதல் ஓவரிலேயே ரோகித் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ். நான்காவது ஓவரில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தினார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் மும்பை அணி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா, சூர்யகுமார் ஜோடி அதிரடியாக ஆடினர். 12-ஆவது ஓவரில் திலக் வர்மா 39 ரன்களுடன் வெளியேறினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 16-ஆவது ஓவரில் 48 ரன்களுடன் வெளியேறினார். இதனால் மும்பை அணி தடுமாறியது.
தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Gujarat Titans beat Mumbai