குஜராத் தேர்தல்: வாக்களித்த 100 வயது பாட்டி

Published On:

| By Prakash

குஜராத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் ஆர்வத்துடன் சென்று 100 வயது பாட்டி வாக்கு செலுத்தினார்.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று (டிசம்பர் 1) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில் நேற்று (நவம்பர் 39) ’குஜராத் முதற்கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு’ என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வெளியூர் ஆட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தேர்தலுக்காக 25,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் நகர்ப்புறங்களில் 9,018 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 16,416 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தேர்தலில் 38,749 விவிபேட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட தேர்தலில் 27,978 தலைமை தேர்தல் அதிகாரிகளும், 78,985 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் 182 வாக்குச் சாவடிகள் மாற்றுத்திறனாளி ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. 1,274 வாக்குச்சாவடிகளில் பெண் தேர்தல் பணியாளர்கள் உள்ளனர்.

இந்த முதற்கட்ட தேர்தலுக்கான மொத்த தொகுதிகளில், 2,39,76,670 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,24,33,362 பேரும், பெண்கள் 1,15,42,811 பேரும், திருநங்கைகள் 497 பேரும் உள்ளனர். இந்த தேர்தலில் 4.77 லட்சம் வாக்காளர்கள், முதல் முறையாக தங்களது வாக்குகளைச் செலுத்த இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதன்முறையாக 33 வாக்குச்சாவடி மையங்கள் இளைஞர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “குஜராத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 9.8 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்காளர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு சமத்துவம் வழங்குவதற்கும் மரியாதை செய்வதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பங்கேற்பது நம் அனைவருக்கும் குறிப்பாக இளம் வாக்காளர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும். இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதன்முறையாக 33 வாக்குச்சாவடி மையங்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்ட இளம் வாக்குச்சாவடி பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து, இங்கு, ஒரே ஒரு வாக்காளருக்காக, தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி மையத்தை அமைத்துள்ளது. குஜராத் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பநேஜ் கிர் கிராமத்தில்தான் அந்த வாக்குச்சாடி அமைக்கப்பட்டுள்ளது.

gujarat assembly election phase 1 voting live

அடர்ந்த காட்டின் நடுவே இருக்கும் இந்த பநேஜ் கிராமத்தில் வசிக்கும் கோயில் பூசாரியான மகந்த் பாரத் தாஸ் என்பவருக்காகத்தான் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், வனவிலங்குகளின் அச்சம் காரணமாக வேட்பாளர்கள் யாரும் இங்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே உதாரணம். இதையடுத்துத்தான், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும், அனைவரும் ஓட்டு போடுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து 100 வயதைக் கடந்த கமுபென் லாலாபாய் படேல் என்ற மூதாட்டி, வல்சாத் மாவட்டத்தில் உள்ள உமர்காமில் வாக்களித்தார். அதுபோல், குஜராத் சூரத் நகர் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் சோலங்கி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், இந்தத் தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள். 81 பேர் கொண்ட இந்த குடும்பத்தில் 62 பேர் வாக்காளர்கள் ஆவர்.

gujarat assembly election phase 1 voting live

தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் இருந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அங்கு, காலை 11 மணி நிலவரப்படி, 18.95 சதவிகித வாக்குப்பதிவாகி இருக்கிறது.

இந்த தேர்தலில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தனது மனைவி அஞ்சலி ரூபானியுடன் சென்று வாக்களித்தார். அதுபோல், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலும், தனது மனைவி கங்கா பாட்டீலுடன் சென்று வாக்களித்தார். பிரபல கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவும் தன் மனைவி ரிவேபாவுடன் சென்று வாக்களித்தார்.

gujarat assembly election phase 1 voting live

ஜடேஜாவின் மனைவி ரிவேபா, ஜாம் நகர் பாஜக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இட்டாலியா, கர்நாடக முன்னாள் ஆளுநர் வஜுபாய் வாலா ஆகியோரும் வாக்களித்தனர்.

குஜராத் முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தலா 89 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 88 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி, முன்னாள் அமைச்சர் பர்சோத்தம் சோலங்கி, 6 முறை எம்.எல்.ஏவான கன்வார்ஜி பாவாலியா, மோர்பி தொங்கு பால விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றிய கண்டிலால் அமிர்தயா, கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, ஆம் ஆத்மியின் குஜராத் மாநிலத் தலைவர் கோபால் இட்டாலியா ஆகியோர் பிரபல வேட்பாளர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

சிறார் ஆபாசப்படம்: மணப்பாறையில் சிபிஐ சோதனை!

திமுக மா.செ.க்கள் கூட்டம்: இரண்டு தீர்மானங்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share