இளைஞர் விக்னேஷ் கத்தியால் குத்தியதில் காயமடைந்து கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்.
கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கத்தியால் குத்தினார். இதில் ஏழு இடங்களில் பாலாஜிக்கு காயம் ஏற்பட்டது.
மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற விக்னேஷை, அங்கிருந்த பாதுகாவலர்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், தனது தாயாருக்கு மருத்துவர் பாலாஜி சரியான சிகிச்சை அளிக்காததால் கத்தியால் குத்தினேன் என்று விக்னேஷ் வாக்குமூலம் கொடுத்தார். தற்போது விக்னேஷ் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தசூழலில், கத்திக்குத்தால் காயமடைந்த பாலாஜிக்கு கிண்டி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜியின் உடல்நிலை தேறியதால், அவர் நேற்று (நவம்பர் 18) இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழகம் மாறும் அபாயம்… ஸ்டாலின் எச்சரிக்கை!
1,000-வது நாளை எட்டும் ரஷ்யா – உக்ரைன் போர்: எச்சரிக்கும் யுனிசெஃப்!