அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செலுத்தாததால், கிண்டி ரேஸ் கோர்ஸை வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று(செப்டம்பர் 9) காலை பூட்டி சீல் வைத்தனர்.
அன்றைய மெட்ராஸ் அரசாங்கம் 1945-ஆம் ஆண்டு 160 ஏக்கர் அளவுள்ள இடத்திற்கான ஓராண்டு வாடகை ரூ.614.13 என்று முடிவு செய்து, கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு குத்தைகைக்கு கொடுத்தது. மேலும் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் 99 வருடத்திற்கான வாடகையை மொத்தமாக அரசுக்கு முன்கூட்டியே செலுத்தியது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம், அதற்கு வழங்கப்பட்ட இடத்தில் பல வகையான விளையாட்டுகளை நடத்த வேண்டும், குறிப்பாக குதிரை பந்தையம் நடத்த வேண்டும் என்று குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1970 ஆண்டு தமிழக அரசு கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு வழங்கபட்ட நிலத்திற்கான வாடகையை உயர்த்தியது. ஆனால் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் இதை கட்டவில்லை. இதன் விளைவாக 2004 ஆண்டு தமிழக அரசு கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் அரசுக்கு ரு.730.86 கோடி ரூபாய் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகமோ 1945 போடப்பட்ட ஒப்பந்தத்தில், ரேஸ் கோர்ஸுக்கான வாடகையை இரு தரப்பும் சேர்ந்துதான், குறைக்கவோ, உயர்த்தவோ முடியும், அரசு இப்படி ஒருதலைபட்சமாக உயர்த்த கூடாது என்று கூறி வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுப்ரமணியம், அரசுக்கும் தனியார் அமைப்புகளுக்கு இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வது அந்தந்த அரசின் கடமை என்று சொல்லி, 1970-2004 காலகட்டத்திற்கான ரூ. 730 கோடி வாடகையை கிண்டி ரேஸ் கோர்ஸ் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் 2004-2023 காலகட்டத்திற்கான வாடகை பாக்கி ரூ.12,381 கோடியை கிண்டி நிர்வாகம் அரசுக்கு செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், வாடகை பாக்கியை கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் அரசுக்கு செலுத்தாததால், கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி கிண்டி ரேஸ் கோர்ஸுடன் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் கிண்டி ரேஸ் கோர்ஸின் கதவுகளை இன்று காலை பூட்டி, சீல் வைத்து மொத்த இடத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதனால் இன்று காலை, எப்போதும் போல வேலைக்கு வந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் ஊழியர்கள் செய்வதறியாது கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
IND vs BAN: மீண்டும் வந்த பண்ட், கோலி… இந்திய அணி அறிவிப்பு!
தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?
அநீதியை தட்டிக்கேட்ட சங்கரை தலைமையாசிரியாக நியமிக்க வேண்டும்: அமீர் கோரிக்கை!