”தமிழ்நாட்டின் எல்லைச்சாமிகளாக தி.க. தலைவர் கி.வீரமணியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருப்பதால் இன்னும் 2000 ஆண்டுகளுக்கு மோடியையும், அமித்ஷாவையும் இந்த மண்ணிலிருந்து ஓட்டக்கூடிய வலிமை நமக்கு இருக்கிறது” என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது: பெரியார் ஏற்றி வைத்த நெருப்பு இன்றைக்கு இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது. அகிலேஷ் யாதவாக இருந்தாலும், மம்தா பானர்ஜியாக இருந்தாலும், வேறு கூட்டணி கட்சிகள் யாராக இருந்தாலும் எங்களிடத்திலே பேசும் போது, “இவ்வளவு தந்திரங்களைச் செய்து, இவ்வளவு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மதவெறியைத் தூண்டி, என்னென்னவோ செய்து ED, Income Tax, CBI எல்லாவற்றையும் வைத்து ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளேயும் நுழைகிறார்களே, நுழைய முடிகிறதே… ஏன் தமிழ்நாட்டுக்கு வர முடியவில்லை” என்று கேட்கிறார்கள். இதற்கு காரணம் ”எல்லைச் சாமிகள்” இங்கே இருக்கிறார்கள்..
92 வயதிலே ஒரு எல்லைச்சாமி (தி.க. தலைவர் கி. வீரமணி). எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்துவிட்டது.. இப்போ. உங்களை வைத்துத்தான். 72 வயதில் கோட்டையில ஒரு எல்லைச்சாமி (முதல்வர் மு.க. ஸ்டாலின்). இந்த எல்லைச்சாமிகள் இரண்டு பேரும் தமிழ்நாட்டில இருக்கிற வரைக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் எல்லோரும் உயிரோடு இருப்பதாக அர்த்தம். அதுவரைக்கும் ஒருத்தனும் உள்ள நுழைய முடியாது. அதுதான் சூத்திரம்.
எனவே, நமக்கு வேலியாக இருக்கின்ற இரண்டு தலைவர்களையும் – தத்துவத்திற்கு ஒரு தலைவர் 92 வயது, தத்துவத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகிற இன்னொரு தலைவர் அவருக்கு 72 – இந்த 72-ம் 92-ம் இணைந்து இன்னும் 2000 ஆண்டுகளுக்கு மோடியையும், அமித்ஷாவையும் இந்த மண்ணிலிருந்து ஓட்டக்கூடிய வலிமையை நமக்குத் தருவார்கள். எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
