மழையால் ஆட்டம் மீண்டும் மீண்டும் தடைபட்ட நிலையில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. GT have pulled it off with win mumbai by 3 wkts
வான்கடே மைதானத்தில் நேற்று (மே 6) இரவு நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 53 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. அந்த அணி14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.

சிறிது நேரத்திற்கு மீண்டும் ஆட்டம் தொடங்க, மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சுப்மன் கில் (43), ரூதர்போர்டு (28), ஷாருக்கான் (6) மற்றும் ரஷித்கான் (2) ஆகியார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது 12 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது.
சிறிது நேரத்தில் கிச்சுகிச்சு மூட்டிய மழை நின்றுவிட, போட்டியில் ஒரு ஓவர் மற்றும் இலக்கில் 8 ரன்கள் குறைக்கப்பட்டது.
இதனால் குஜராத் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடைசி ஓவரை தீபக் சஹார் வீசினார். முதல் பந்தில் தெவட்டியா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்த நிலையில், மூன்றாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் கோட்ஸி.
நான்காவது பந்தில் நோபாலுடன் சேர்த்து இரண்டு ரன்கள் எடுக்க ஆட்டம் டிரா ஆனது.
ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் கோட்ஸி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரசிகர்கள் சீட் நுனிக்கே வர சஹாரின் திக் திக் கடைசி பந்தில் அர்ஷ்த் கான் 1 ரன் எடுத்து குஜராத் அணியின் த்ரில் வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் அந்த அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.