ஏப்ரல் 2023க்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி எனும் சரக்கு சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. மாதம் தோறும் ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று (மே 1) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடி வரி வசூல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
’2023 ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,87,035 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி ரூ 38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 47,412 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 89,158 கோடி (செஸ் ரூ. 34,972 கோடி உட்பட).
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.45,864 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.37,959 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளது.

ஏப்ரல் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும்.
முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது.
அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228கோடி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (இதே தேதியில்) அதிகபட்ச ஒற்றை நாள் கட்டணம், 9.6லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 57,846கோடியாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,559கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19சதவீதம் அதிகமாகும்.
புதுச்சேரியில், ரூ.218கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிக வசூலாகும்’ என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரியா
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் யார் யார்?-முழு விவரம்!