GROK-ல் எல்லை மீறும் நெட்டிசன்கள்… வைரலாகும் பிகினி போட்டோக்கள்… கட்டுப்படுத்தப்படுமா?

Published On:

| By Kavi

எந்திரன் படத்தில் நடிகர் ரஜினி, ஆசையாக… நல்ல விஷயங்களுக்காக ஒரு ரோபோவை உருவாக்குவார். அந்த ரோபோ முதலில் பிரசவம் பார்ப்பது, படிப்பதற்கு உதவுவது போன்ற வேலைகளை செய்யும்…

பின்னர் படத்தின் வில்லன் சிட்டி ரோபோவுக்கு தவறான சிப்பை பொறுத்திவிடுவார். இதன் காரணமாக அந்த ரோபோ, தன்னை உருவாக்கிய கதாநாயகனான ரஜினியையே அழிக்க அத்தனை வேலைகளையும் செய்யும்.

ADVERTISEMENT

அதுபோலத்தான் இப்போது, இந்த ஏஐ காலத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் இப்போது வளர்ச்சியை நோக்கி செல்கிறதோ இல்லையோ… தவறு செய்பவர்களுக்கும், வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கும், வன்மம் பிடித்தவர்களுக்கும் நன்றாக பயன்படுகிறது…

எலான் மஸ்கின் x.AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘க்ரோக்’ (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய “பிகினி இமேஜுகள்” விவகாரத்தால் பேசுபொருளாக மாறியுள்ளது

ADVERTISEMENT

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேட்கும் ஆபாசமான படங்களை பொதுவெளியில் வெளியிட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகள், சினிமா நடிகைகள் என யாரும் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால், அவர்களை தவறாக பார்க்க நினைக்கும் நெட்டிசன்கள், அந்த புகைப்படங்களை பதிவிட்டு பிகினி உடையிலோ அல்லது வெளிப்படையாக தெரியும் உடையிலோ மாற்றித் தருமாறு கேட்கிறார்கள்.

ADVERTISEMENT

க்ரோக்கும் அந்த புகைப்படங்களை பிகினியில் மாற்றிக்கொடுக்கிறது.

 பாலிவுட் நட்சத்திரங்களின் படங்கள் ஏற்கனவே வைரலாகி விட்ட நிலையில், மீனாட்சி சவுத்ரி, மாளவிகா மோகனன் மற்றும் பிக் பாஸ் புகழ் வியன்னா போன்ற தமிழ் மற்றும் தென்னிந்திய நடிகைகளின் புகைப்படங்களும் இவ்வாறு மாற்றப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவி  வருகிறது.

சொல்லப்போனால், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர்களில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் பெண்களின் புகைப்படங்களும் இவ்வாறு செய்யப்படுகின்றன. தங்களுக்கு பிடிக்காதவர்களின் புகைப்படங்களை எடுத்து ஃபேக் ஐடியில் போட்டு, “ஹே க்ரோக், இந்தப் பெண்ணை வெளிப்படையான பிகினியில் போடு” என்று கேட்கின்றனர்.

க்ரோக்கும் சற்று நேரத்தில் பிகினியில் மாற்றி கொடுத்துவிடுகிறது.

இந்த பிகினி ட்ரெண்ட் ஆரம்பித்தவுடன் எலோன் மஸ்க்கும் தன்னை பிகினியில் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். அதாவது ஏற்கனவே ai-ஆல் உருவாக்கப்பட்ட பிகினி படத்தில் உள்ளவரை மாற்றி தன்னுடைய படத்தை சேர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதன்படியே க்ரோக்கும் செய்து கொடுத்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பில்கேட்ஸ் என பலரது புகைப்படங்களும் தற்போது பிகினியில் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த AI கருவியை ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்குப் பதிலாக, பெண்களை தவறான நோக்கத்தில் சித்தரிக்கப் பயன்படுத்துவது சமூகத்தில் பெரும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது.

இந்நிலையில் ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, க்ரோக் AI பெண்களின் படங்களை பாலியல் ரீதியாகச் சித்தரிக்க உதவுகிறது. எனவே, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு, பெண்களின் கண்ணியத்தை மீறாத வகையில் க்ரோக் AI-யில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ட்விட்டர் பயனர்கள் இதுவரை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை உடனே நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதல் இல்லாமல், அவர்களின் படங்களை இத்தகைய கவர்ச்சியான வடிவத்தில் மாற்றுவது அவர்களின் தனிப்பட்ட தனியுரிமையை அப்பட்டமாக மீறுவதாகும். பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இந்த அம்சத்தைத் தடை செய்வதற்கோ அல்லது கடுமையான விதிமுறைகளுடன் அதைக் கட்டுப்படுத்துவதற்கோ தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அதாவது, இதுவரை எந்த புகைப்படங்களும் நீக்கப்படவில்லை. மாறாக தனது பிகினி புகைப்படத்துக்கு எலோன் மஸ்க், ஸ்மைலியை பகிர்ந்துள்ளார்.

பிகினியை தொடர்ந்து தற்போது அரசியல் மற்றும் சினிமா ஹீரோக்களின் புகைப்படங்களை வைத்தும் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இரு அரசியல் தலைவர்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதில் ஊழல் செய்தவர் படத்தை நீக்குமாறு ட்விட்டர் பயனர்கள் கேட்கிறார்கள். உடனே க்ரோர்க்கும் அதில் ஒரு தலைவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு இன்னொருவர் இருக்கும் படத்தை மட்டும் பகிர்கிறது. இதுமட்டுமல்ல யார் சிறந்த முதல்வர்? அரசியலே தெரியாமல் அரசியல் செய்வது யார்? என பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இப்படியாக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தமிழக, இந்திய அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் வைரலாகுகின்றன.

இத்தகைய சம்பவங்கள், செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share