கோவையிலும், நெல்லையிலும் ஓராண்டுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட அந்த ‘தரமான சம்பவம்’ நேற்று நடந்து விட்டது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கியமான மாநகராட்சிகளின் மேயர்களும் ஒரே நாளில் தங்கள் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். இதன் வாயிலாக, இரண்டு நகரங்களிலும் நடந்து வந்த உட்கட்சி மோதல்கள், சண்டை, சச்சரவுகள், சமூக ஊடகத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்கான பகீரத பிரயத்தனங்கள் துவங்கிவிட்டன; இன்னும் முழுதாக மூன்று ஆண்டுகள் கூட இல்லாத நிலையில், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கு யாரை மேயராக திமுக தலைமை தேர்வு செய்யப்போகிறது என்பதுதான் இப்போது கோவை திமுகவினரின் எதிர்பார்ப்பாகவும், கொங்கு மண்டலத்திலுள்ள கோடிக்கும் அதிகமான மக்களின் பரபர விவாதமாகவும் இருக்கிறது.
வரும் 2026 ஆம் ஆண்டில் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கோவையில் கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. செந்தில்பாலாஜி வெளியில் இருந்திருந்தால் இந்த ராஜினாமாவுக்கு அவ்வளவு தேவை இருந்திருக்குமா, அவரை மீறி கல்பனாவிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டிருக்குமா என்பதற்கு அவரும் திமுக தலைமையும்தான் பதில் சொல்ல முடியும். கோவை திமுகவினரின் இப்போதைய கேள்வியெல்லாம், இனியாவது தகுதியான ஒருவரை திமுக தலைமை தேர்வு செய்யுமா என்பதுதான். கடந்து போன இரண்டரை ஆண்டுகளில் இவர்கள் பெற்றுள்ள கசப்பான, கடுப்பான, கற்றுக் கொண்ட அனுபவங்கள் அனைத்தும் அப்படித்தான் இருந்திருக்கின்றன.
கோவை மாநகராட்சிக்கு கல்பனாதான் முதல் பெண் மேயர். இதற்கு முன், ஆண்களுக்கான ஒதுக்கீட்டை, முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பினாமியாக வர்ணிக்கப்படும் பொறியாளர் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளாவுக்காகவே பெண் மேயர் ஒதுக்கீடாக அதிமுக மாற்றியமைத்தது என்று அப்போது பேச்சு எழுந்தது. அதற்கேற்பவே அவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். காலம் அதற்கு எதிராக தீர்ப்பை எழுதியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட அக்கட்சியால் வெற்றி பெற இயலவில்லை. அதற்குப் பின்தான், கோவையின் மீது, முதல்வர் ஸ்டாலின் அதிகக் கவனம் செலுத்தத் துவங்கினார். அதுவரையிலும் அமைச்சர்கள் இளித்துரை ராமச்சந்திரன், சக்கரபாணி என பலரையும் மாற்றியும், மரண அடி வாங்கி விழுந்து கிடந்த கட்சியை ஓர் அங்குலத்துக்குக் கூட எழுப்ப முடியவில்லை. அதற்குப் பிறகுதான், செந்தில் பாலாஜியிடம் மாவட்டத்தின் பொறுப்பைக் கொடுத்தார் ஸ்டாலின். உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அதிமுக கொண்டு வந்த பெண் மேயர் என்பதை மாற்றி, ஆளுமையுள்ள ஆண் மேயரை நியமித்து, கட்சியை மீண்டும் கரை சேர்க்க கட்சித் தலைமை ஏதாவது செய்யும் என்று கழகக் கண்மணிகள் நம்பினார்கள். ஆனால் அதிமுக செய்த மாற்றத்தை அப்படியே வைத்துக் கொண்ட தமிழ்நாடு அரசு, நேரடி மேயர் என்பதை மட்டும் மாற்றி, கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் முறையை மீண்டும் கொண்டு வந்தது. ஆளும்கட்சியினரிடம் அவ்வளவு உற்சாகமும், ஈடுபாடும் இல்லை. ஆனாலும் செந்தில்பாலாஜியின் கரூர் டீம் களம் இறங்கிக் கலங்கடித்தது. வீட்டு வீட்டுக்கு ஹாட் பாக்ஸ், கொலுசுகள் போய்ச் சேர்ந்தன. சில பகுதிகளுக்கு, இவற்றோடு சேர்த்து ஓட்டுக்கு இவ்வளவு என்று நோட்டும் விநியோகிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், கதர்ச்சட்டைக்காரர்களும், காம்ரேட்களுமே விக்கிப் போய் நின்று விட்டனர். தேர்தலில் 97 வார்டுகளில் வென்று, இதுவரையிலும் மாநகராட்சித் தேர்தலில் எக்கட்சியும் பெறாத அசாத்திய வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. அதற்கான ஒற்றைக்காரணம், செந்தில்பாலாஜி என்கிற அரசியல் ஆளுமையும், அவரால் வகை தொகையின்றி களத்தில் இறக்கப்பட்ட டாஸ்மாக் காசும்தான். அப்படி வெற்றி பெற வைத்தபின், அவரால் கைகாட்டப்பட்ட மேயர்தான் கல்பனா ஆனந்தகுமார்.
கோவை கணபதி பகுதியில், மிகச்சாதாரணமான ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்பனா. அவரின் கணவர் ஆனந்தகுமார் குடும்பம், திமுக பாரம்பரியம் கொண்டது என்ற அடிப்படையில், அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், கல்பனாவுக்கு கவுன்சிலராகும் வாய்ப்புக் கிடைத்தது. தேர்தல் நேரத்தில், கோவைக்குச் சென்ற துர்கா ஸ்டாலினின் கடைக்கண் பார்வையும் இவருக்குக் கிடைக்க, இரண்டு பலமான பரிந்துரைகளால், பெருமை வாய்ந்த கோவை நகருக்கு மேயரானார் கல்பனா. பெரிதாக படிப்பும் இல்லை, பணமும் இல்லை, பேச்சுத் திறமையோ, நிர்வாகத்திறமையோ இருந்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. சாதாரண இ-சேவை மையத்தை நடத்தி வந்த கல்பனாவுக்கு, அவரின் எளிமையும், இயல்பான அணுகுமுறையும், காலம் வகுத்துக் கொடுத்த அதிர்ஷ்டமுமே அந்தப் பதவியைப் பெற்றுத்தந்தது.
கோவையில் இதுவரை மேயராக இருந்த வி.கோபாலகிருஷ்ணன், மலரவன், காலனி வெங்கடாசலம், செ.ம.வேலுச்சாமி, ராஜ்குமார் என அத்தனை பேருமே, அதற்கு முன்பாக அரசியலிலும், சமூகத்திலும் குறிப்பிடத்தக்க அடையாளம் பெற்றவர்களாக இருந்தவர்கள். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ள கோவைக்கு, முதல் பெண் மேயரைத் தேர்வு செய்யும்போது, படிப்பு, நிர்வாகத்திறன், பேச்சுத் திறன், கட்சிப்பணி செய்ததற்கான அனுபவம் என எதையாவது பார்த்திருக்க வேண்டுமென்று, கோவையின் திமுக நிர்வாகிகள் அப்போதே முணுமுணுத்தனர். இருந்தாலும் ஜெயலலிதாவின் பாணியில், மிகவும் எளிமையான ஒருவரையும் பெரிய பதவியில் அமர்த்திப்பார்க்கும் ஸ்டாலினின் அணுகுமுறை, கட்சி நிர்வாகிகளுக்குள் ஒரு விதமான உற்சாகத்தையும், கூடுதல் நம்பிக்கையையும் கொடுத்தது.
இன்றைக்கு பல முக்கியக்கட்சிகளில் பெரிய ஆளுமைகளாக இருக்கும் பலரும், இத்தகைய வாய்ப்புகளில் படிப்படியாக முன்னேறி வந்தவர்கள்தான். திமுகவின் வரலாற்றில், சில குறிப்பிட்ட திறமைகள், தகுதிகள், அனுபவங்கள், கட்சிப்பணி செய்ததற்கான சான்றுகளை வைத்தே, பதவிகள் வழங்கப்படுவது வழக்கம். புதிதாக தேர்தலில் நிற்கவும், ஒரு முக்கியப் பதவிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டாலும், அடுத்த சில மாதங்களுக்குள் அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்பதே அக்கட்சிக்கான தனித்துவம், வரலாறு. இல்லாவிட்டால், அடுத்த முறை அவர்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படாது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். அவர் முதலில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டபோது, ‘யார் இவர்’ என்று கேட்டவர்கள், சில காலத்துக்குப் பின் அவருடைய பேச்சு, செயல்பாடு, கட்சிப்பணியாற்றிய வேகம் அனைத்தையும் பார்த்து பிரமித்து நின்றிருக்கிறார்கள்.
ஆனால் கோவை மேயராக தேர்வு பெற்ற கல்பனா, எந்த வகையிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அதிகாரத் தோரணையைக் காட்டத்துவங்கினார். மேயரான சில நாட்களிலேயே அவரின் பேச்சு, நடவடிக்கை, தொனி எல்லாமே மாறிப்போனது. ஒரு பெருமை மிகு பதவியை வைத்து, மக்களுக்கும் பணி செய்து, தன் எதிர்காலத்தையும் பலப்படுத்திக் கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பை அவர் அப்பட்டமாக நழுவவிட்டார். சம்பாதிப்பதற்குத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்று அவரும், அவருடைய குடும்பத்தினரும் பதற்றப்பட்டது, பட்டவர்த்தனமாக வெளியில் தெரியத் துவங்கியது. முதலில் யாருக்குமே வணக்கம் சொல்லாமல் முகத்தைத் திருப்பத் துவங்கினார். அதன்பின் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களை மதிக்காமல் உதாசினப்படுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக தன் குரலை உயர்த்தி, சிலரை மிரட்டவும் துவங்கினார். அப்போதுதான் ஒப்பந்ததாரர்களிடம் 3 சதவீதம் அவர் கமிஷன் கேட்ட ஆடியோ வெளியானது. அவருடைய கணவர், மேயரின் வார்டில் தள்ளுவண்டிக் கடை போட்டிருந்த கட்சிக்காரரிடமே மாமூல் கேட்டதாக புகார் வெடித்தது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவர், கட்சியில் முறையிட்டு நியாயம் கிடைக்காமல் மாவட்ட ஆட்சியரிடம் வந்து தனக்குப் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமானது.
கல்பனா, மேயராவதற்கு முன்பு, லைன் வீட்டில் குடியிருந்தபோது, கல்பனாவின் தாயினுடைய சிகிச்சைக்கு, கடன் கொடுத்த பக்கத்துவீட்டுக்காரப் பெண்மணி, மேயரான பின் அந்தத் தொகையைத் திரும்பக் கேட்டதற்கு, அவர்களை அவமானப்படுத்தி, அவர்கள் வீட்டில் குப்பையைக் கொட்டி, கதவைப் பூட்டி, பல விதமாய்த் துன்புறுத்திய வீடியோவும் வெளியாகி, கோவை மக்களையே கொந்தளிக்க வைத்தது. மண்டலக் கூட்டங்களில், பெண் மண்டலத் தலைவர்களுக்கும், கல்பனாவுக்கும் இடையே நடந்த காரசார விவாதங்கள், கூட்டம் முடிந்தபின் குடுமிப்பிடிச் சண்டை மட்டுமே போடவில்லை என்கிற அளவுக்கு பகை முற்றியது.
இந்த பிரச்னையெல்லாம் செந்தில் பாலாஜியின் காதுக்கும் போனது. அவரும் அவ்வப்போது கூப்பிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் சிறை சென்றபின், இந்த மோதலும், அதிகாரப்போக்கும் இரட்டிப்பானது. அதுவரை அமைதி காத்த திமுக நிர்வாகிகள், மேயரை திருப்பி அடிக்கத் தயாராயினர். அவரை மாற்றச் சொல்லி கூட்டாகக் கொடி தூக்கத் துவங்கினார்கள்; அறிவாலயத்துக்குப் படையெடுத்துச் சென்று, மாறிமாறி புகார்களை அடுக்கினார்கள். செந்தில்பாலாஜி சிறையில் இருந்தே காப்பாற்றினார்.
செந்தில்பாலாஜிக்குப் பதிலாக பொறுப்பு அமைச்சராக வந்த முத்துசாமியிடமும் பல முறை பஞ்சாயத்து போனது. அவரும் தன் பங்குக்கு அழைத்து, மிகவும் தன்மையாகவே அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இவர் இடையில் வந்த பொறுப்பாளர்தான்; நாம் செந்தில்பாலாஜியின் ஆள் என்ற மமதையில் அவரையும் அவர் மதிக்காமல் நடந்து கொண்டதாக திமுகவினரே திசையெங்கும் தகவல் பரப்பினர். மேயரிடம் பேசி, எதற்குமே பலனில்லை என்ற நிலையில், முத்துசாமியும் திமுக தலைமையிடம் தன் தரப்பை விளக்கிவிட்டார். இதற்கு இடையில், மேயரும், துணை மேயர் வெற்றிச் செல்வனும் சேர்ந்து சென்ற ஜனவரியில் போகிப் பண்டிகை நாளில், மாநகராட்சி கவுன்சிலின் விதிகளையே மொத்தமாய்க் கொளுத்திப் போட்டது போல, ஒரு காரியத்தைச் செய்தார்கள். மாநகராட்சி ஒப்பந்தப்பணிகளை இனிமேல் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று சொல்லி, CCMC TENDER MEMBERS என்ற பெயரில் ஒரு வாட்ஸ்ஆப் குழுவைத் துவக்கி, அதில் 180க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தார்கள். அதில் இவர்களும் வேறு எண்களில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த விவகாரம் மிகப்பெரியதாக வெடித்தது.
ஆண்டுக்கு ஆயிரத்து அறுநுாறு கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஒப்பந்தப்பணிகள் நடக்கும் ஒரு மாநகராட்சியில் வாட்ஸ்ஆப் குழு வைத்து டெண்டர் முடிவு செய்வது வெளியே தெரிந்தால், ஆட்சிக்கு எவ்வளவு அவப்பெயர் ஏற்படும் என்பதைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், பணம் ஒன்றே பிரதானம் என்று கண்ணை மூடிக்கொண்டு செய்த இந்த செயல், அடுத்த நாளே அம்பலத்துக்கு வந்து விட்டது. மாநகராட்சி ஆணையாளர் கவனத்துக்குப் போய், அது கலைக்கப்பட்டதும், விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டதும் அரசின் கவனத்துக்கும் போனது. இடையில் இதை அமலாக்கத்துறை வரை கொண்டு போவதற்கு அதிமுக தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் நேருவே தலையிட்டு, அதைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஒரு தகவல் உண்டு. அதற்கு முன்பே, கோவையின் மீது ஒரு தனி வெறுப்பைக் காட்டி வந்த நேருவுக்கு, இந்த விவகாரத்துக்குப் பின், மேயரை மாற்ற வேண்டுமென்ற கவுன்சிலர்களின் கோரிக்கையின் அர்த்தம் புரிந்தது. அவரும் தன் பங்கிற்கு தலைமையிடம் தகவல் பரிமாறியிருக்கிறார்.
விவகாரத்தை அமலாக்கத்துறையிடம் கொண்டு போகாமல் நிறுத்திய அதிமுக தரப்பு, இதை வேறு வழியில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஆதாரப்பூர்வமாக புகாராகக் கொண்டு சென்றது. அவர்களும் இதை வேகமாகக் களமிறங்கி விசாரிப்பது போல் விசாரித்தார்கள். ஒன்றுமே செய்யவில்லை. இடையில் நாடாளுமன்றத் தேர்தலும் வந்தபின் எல்லோரும் அதை மறந்து போனார்கள். ஆனால் தேர்தலின்போது, மேயரின் மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. அவர் எந்த தேர்தல் பிரசாரத்துக்கும் செல்வதில்லை; கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என்று நிர்வாகிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். பொள்ளாச்சி தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பூச்சி முருகன், தொண்டாமுத்துார் சட்டமன்றத் தொகுதியில் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியபோது, மேயர் வராததைக் குறிப்பிட்டு, மேடையிலேயே பகிரங்கமாக வெளுத்து வாங்கியது, சமூக ஊடகங்களில் சடுதியில் பரவியது. அலறியடித்து வந்து மன்னிப்புக் கேட்டார் கல்பனா. ஆனாலும் தேர்தல் களத்தில் அவரைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. அதற்கேற்ப அவரது வார்டிலேயே பாரதிய ஜனதா முதலிடத்தில் இருந்தது. மாநகரம் முழுவதுமே பெரும்பாலான வார்டுகளில் திமுகவுக்கு இரண்டாமிடமே வாக்குகள் கிடைத்தன.
இதில் இன்னொரு கொடுமையும் நிகழ்ந்தது. இவருக்கு கவுன்சிலர் சீட் வாங்கிக் கொடுத்ததே, இப்போதைய கோவை எம்பி ராஜ்குமார்தான். மாநகர் மாவட்டத் தலைவரான அவருக்குத் தரப்பட்ட ஆறு வார்டுகளில், இவருக்கு ஒரு வாய்ப்பை வாங்கித்தந்த அவரையே கல்பனா மதிக்கவில்லை என்பதோடு, அவருக்காக தேர்தல் பணியும் செய்யவில்லை. இவையனைத்தும் ஒவ்வொரு காகிதமாகச் சேர்ந்து சேர்ந்து, பெரிய கோப்பாக அறிவாலயத்தில் சென்றடைய, அனைத்தையும் இப்போது ஆசுவாசமாகப் புரட்டிப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், கோவை மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார். இதற்கான உத்தரவு, பல நாட்களுக்கு முன்பே, அவருக்குச் சென்று விட்டாலும், முதல்வரை நேரில் சந்தித்துதான் தன் பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பேன் என்று சென்னையில் கல்பனா முகாமிட்டிருந்தார். இறுதிவரை அவரைச் சந்திக்க வாய்ப்புத் தரப்படவில்லை. கோவை வந்தபின், ஆணையாளரிடமிருந்து அவருக்குக் கடிதம் தரச் சொல்லி, தகவலும் பறந்திருக்கிறது. அதற்குப் பின்னும் கடிதம் தராமல், உடல்நிலை சரியில்லை, அது இது என்று சொல்லி இழுத்தடித்தபின்பே, கடிதத்தைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் முன்னாள் மேயர் கல்பனா.
அரசியலில் மட்டுமில்லை; வாழ்க்கையிலும் எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும், வெகு உயரத்தில் நிற்கும்போது நிதானத்தோடு இருக்க வேண்டுமென்பதையும் உலகிற்கு உணர்த்திச் சென்றதுதான், கோவை மேயராக இரண்டரை ஆண்டுகள் இருந்த கல்பனாவுக்கான ஒரே வரலாற்றுக் குறிப்பு!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–பாலசிங்கம்
டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!
பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றம் போக்க என்ன வழி?
டாப் 10 நியூஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீது தீர்ப்பு முதல் இந்திய அணி வீரர்கள் பேரணி வரை!
Comments are closed.