கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றக் குழு நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அமெரிக்காவில் அதிகளவில் பணிபுரிகிறார்கள். எனினும் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால் அதற்காக விண்ணப்பித்து பல்லாயிரக்கான இந்தியர்கள் காத்துள்ளனர்.
தற்போது H-1B, H-2A, H-2B மற்றும் H-3 ஆகிய விசாக்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல H-4 விசா வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அங்கு பணி செய்வதற்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணமான (EAD) படிவம் I-765க்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கி அவை செயலாக்கப்படும் வரை விண்ணப்பித்தவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்துக் காத்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த புதிய மசோதா H-1B, H-2A, H-2B மற்றும் H-3 விசா வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு H-4 விசாக்கள் மூலம் ‘Automatic Work Rights’ என்ற தானாகவே பணி செய்வதற்கான அனுமதியை வழங்குகிறது. இதன்படி இவர்கள் தங்களின் H-4 விசாக்கள் மூலம் அமெரிக்காவில் பணி செய்வதற்கான உரிமையை எந்த போராட்டமுமின்றி எளிதில் வழங்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
இந்த நிலையில் கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித் துறைக்கான அமெரிக்க நாடாளுமன்றக் குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்குரிய கிரீன் கார்டு வரம்பை அதிகரிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
குறிப்பாக குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசாக்களுக்கு ஒதுக்கப்படும் கிரீன் கார்டு வரம்பை 7இல் இருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்க இந்த மசோதா அங்கீகரிக்கிறது. நீதித்துறைக்கான நாடாளுமன்றக் குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும். இந்த மசோதாவுக்கு செனட் சபையின் ஒப்புதலும் அவசியம்.
செனட் சபை ஒப்புதலுக்கு பிறகு ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திடுவதற்காக இந்த மசோதா வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி கையெழுத்திட்ட பின் சட்டமாக மாறும். இந்த மசோதா சட்டமாக மாறினால் அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள், சீனர்கள் அதிகளவில் பலன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**- ராஜ்-**
