திருவண்ணாமலை மலை உச்சியில் இன்று (டிசம்பர் 3) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் 2025 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டு, சிவாச்சாரியர்களால் பரணி தீபங்கள் ஏற்றப்பட்டு பக்தர்களுக்குக் காட்டப்பட்டன. இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையின் உச்சியில், உலகப் பிரசித்தி பெற்ற மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடந்தன.
ராட்சத கொப்புரையில் 4500 கிலோ நெய் ஊற்றப்பட்டு, 1500 மீட்டர் காடா துணியை திரியாக வைத்து, அதில் கற்பூரம் திணித்து தீபம் ஏற்ற தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மாலை 5.59 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.அண்ணாமலையார் ஜோதி வடிவமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேசமயம் கோயிலில் அர்த்தநாதிஸ்வரராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடினார்.
அப்போது பக்தர்கள் அரோகரா… அண்ணாமலையாரே போற்றி போற்றி என கோஷம் எழுப்பினர்.
“பார்த்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை” என்று சொல்வதற்கு ஏற்ப இன்று ஏற்றப்படும் மகா தீபம், பக்தர்களுக்கு ஆன்மீக ஒளியையும் அமைதியையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.
