பாரம்பரிய விதைகளைச் சூல் கொண்ட மூதாய்! – ஸ்வேதா டாகா

Published On:

| By Balaji

ஷம்மி மீனா பாட்டிக்கு, தனக்கு என்ன வயசிருக்கும்? என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், சின்ன வயதில் என்னவெல்லாம் ருசித்துத் தின்றார் என்பதை, ஞாபகம் வைத்து விலாவாரியாகப் பேசுகிறார். “அந்த ருசியெல்லாம் இப்ப மாறிப்போச்சு. அந்த மணமும், ருசியும் இப்பப் பாக்க முடியாது. பாரம்பரிய உள்ளூர் விதைகள் இப்ப கிடையாது. பல வகையான விதைகளைப் பார்ப்பது அபூர்வமாயிருக்கு” என்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்கிறார். அவரை, ஷம்மிபாய் என்று அழைக்கிறார்கள். அவருக்கு எப்படியும் 80 வயசுக்கு மேல இருக்கும். அவர் சிறுமியாக இருக்கும் போதிருந்தே விதைகளைச் சேகரித்து வருகிறார். தமது வீட்டைக் கட்டவும், நிலத்தைப் பார்க்கவும், தாமும் தமது கணவரும் பட்ட துண்பங்களை நினைவு கூர்கிறார். அன்றாட வாழ்க்கையை சராசரியாகக் கழிப்பதற்கே எவ்வளவு உழைப்பைச் செலவளிக்கிறோம். எப்படியிருந்தாலும் வாழ்க்கையும், சாப்பாடும் அந்தக் காலத்தில் இருந்ததுபோல இப்போது இல்லை என்கிறார்.

ADVERTISEMENT

பல ஆண்டுகளாக ஷம்மிபாயும், அவரது குடும்பத்தினரும் பாரம்பரிய விதைகளைச் சேகரித்து, பாதுகாத்து வருகின்றனர். இதில் தனது அனுபவத்தையும், பட்டறிவையும் தனது மருமகள்களுக்குக் கடத்தியிருக்கிறார். “பெண்கள்தான் விதைகளை நல்லா பராமரிப்பாங்க’’என்றார். “நன்றாகப் பார்க்கிறார்கள். அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரிகிறது. இது, ரொம்ப நுட்பமான காரியங்கள்” என்று விளக்கமளித்தார்.

ஷம்பாபாய், டோலிபாய் என்பது மருமகள்களின் பெயர்கள். இவர்கள் திருமணமாகி வரும்போது விதைகள் பற்றி ஒன்றுமே தெரியாது. மாமியாரைப் பார்த்துப்பார்த்து அவரது பாரம்பரிய அறிவைக் கிரகித்துக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

‘‘இப்போ, பத்து வருசத்துக்குப் பிறகும் என்கிட்டக் கத்துக்கிட்டத எனக்கே காட்டுகிறார்கள்’’ என்கிறார் ஷம்மிபாய். விதைகளைப் பராமரிக்க, சேறு மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட குதிர்களை மட்டும் இக் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர். இப்பானைகள், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை. இது, விதைகளை குளிர்ச்சியாகப் பராமரிக்கிறது. இதில் உள்ள விதைகளின் உலர்தன்மையைப் பராமரிக்க அப்பாத்திரங்களில் ஒரு துளையிட்டு சோளக்கதிரால் அடைத்துள்ளனர். பூச்சிகள் அண்டாமல் இருக்க மண்ணெண்ணெய், வேம்பு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து பானையைச் சுற்றி பூசிவிடுகின்றனர்.

இதோடு அவசரகாலத்துக்காக, விதைகளை நீண்ட காலம்பராமரிப்பதற்காகவும், வேறு சிலபாரம்பரிய முறைகளையும் கையாள்கிறார் ஷம்மிபாய். அதாவது, சுரைக்காய் குடுகையில் விதைகளைப் பாதுகாத்து வைக்கிறார். அது மட்டுமல்லாமல், கொத்தி எனப்படும் சுவரில் விதைகள் வைக்கப்பட்டு பூசப்படுகின்றன. இவை, நீண்டகாலத்துக்குப்பாதுகாப்பாகபராமரிக்கப்படுமாம்.

ADVERTISEMENT

”ஒரு பெரிய வெள்ளம் வந்தது. 1973 அது. கிராமத்திலுள்ள எல்லா வீடுகளையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. எல்லாம்போச்சு. ஆனால், விதையைப்பாது காப்பதில் கவனமாக இருந்தேன். அதுதான் இன்னிக்கும் இருக்கிறது. விவசாயியின் வாழ்க்கையைப்பாதுகாப்பதில் விதைகள் முக்கியம்”என்கிறார்.

பல ஆண்டுகளாகவே, இந்த பாரம்பரிய விதைகளை தாம்மட்டும் சொந்தம் கொண்டாடாமல் மற்ற விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள், இந்தப் பாரம்பரிய விதைகளைக் கொண்டு பயிரிட விரும்புபவர்கள் முன்வந்தால் தருகிறார்கள். எவ்வளவு விதை வாங்குகிறார்களோஅ தைப்போல, ஒன்றரை மடங்கு விளைச்சலுக்குப்பின் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.

ஷம்மிபாய் குடும்பம், தமது தேவைக்கான தானியங்களை இயற்கை முறையில் மட்டும் விவசாயம் செய்கிறது. அரசு தரும் இலவசவிதை, நாற்று, மானிய உரம் எதையும் பயன்படுத்துவதில்லை. இதனால் ‘என்னை முட்டாள் என்கிறார்கள்’ என்கிறார் ஷம்மிபாயின் மகன் கேசாராம் மீனா.

இக்குடும்பம், மிகப்பல ஆண்டுகளாகவே பல்பயிர் முறையைக் கடைப்பிடிக்கிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை பயிரை மாற்றுகிறார்கள். ஆனாலும், சந்தைத் தேவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கிராமத்துக்குத் தேவையான அளவு விளைச்சல் காண்பதில்லை. இதனால், தமது குடும்பத்துக்கான மற்ற தானியங்களை விலை கொடுத்துவாங்க வேண்டியுள்ளது. ‘‘அந்தக் காலத்தில் எங்களுக்குத் தேவையான எல்லாம் எங்கள் நிலத்தில் விளைந்தது. உப்பு வாங்கமட்டும்தான் கடைக்குப் போவோம்’’என்கிறார்பாய்.

‘‘என் புருசன் இருந்தப்ப எல்லாம் இப்படி இல்லை. அடிக்கடி மழைபெய்யும். ஒரே தண்ணிக்காடா இருக்கும். தண்ணித் தட்டுப்பாடு வந்ததே இல்லை. இப்போ பெரும்போரட்டம். அப்படியும் வெயில் கொளுத்துது. இன்னமும் கொளுத்துது” என்கிறார் ஷம்மிபாய்.

இவர் மட்டுமல்லாமல் இந்தியாவில் விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். ஆனால், அவர்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. கிராமப் பகுதிகளில் சில சமயங்களில் விதைகள்கூட ஆண்விதை, பெண்விதை என்று அடையாளம் காணப்படுகிறது. அதன் பொருளாதார அடிப்படையில் பொருளாதாரப் பலன் அளிக்கும் விதை ஆண்விதையாம். அதாவது பருத்தி, தேயிலை, காப்பி இதெல்லாம் ஆண் விதைகள். காய்கறி விதைகள் பெண் விதைகளாம். ஆனால் வீட்டைக் காப்பது எந்த விதைகள் என்று கூடப் பார்ப்பதில்லை.

இந்த மேவார் பகுதியில் விதை சேமிப்பு மற்றும் கூட்டு விவசாயம் ஆகிய விழிப்புணர்வுத் திட்டத்துக்காக பணியாற்றிவரும் செயல்பாட்டாளர் பன்னாலாம்பட்டே. இங்கு இயற்கை முறை விவசாயம் மிகவும் கட்டுப்படியாகவில்லை என்கிறார் அவர்.

இருந்தாலும் ஷம்மிபாயின் பேரன் பேத்திகள்கூட பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதையும் இயற்கை விவசாயத்தையும் விடுவதாக இல்லை.

ஒரு பக்கம் மரபுப்பண்பு மாற்றப்பட்ட விதைகள் ராஜஸ்தானில் விஷம்போல அறிமுகமாகி மண்ணையும், விவசாயத்தையும் அழிக்கிறது. என்றாலும் பாரம்பரிய விதைக்களஞ்சியத்தை உயிராகப்பாது காக்கும் ஷம்மிபாய் குடும்பத்தினரும் நம்பிக்கை தருகிறார்கள்.

(கட்டுரையாளர்: ஸ்வேதாடாகா. பெங்களூர் எழுத்தாளர், புகைப்படக் கலைஞர். ஊரக இந்தியாவுக்கு மக்கள் ஆவணக் காப்பகம் மற்றும் அறிவியல், சுற்றுச் சூழலுக்கான மையம் ஆகியவற்றுக்கான பல் ஊடகத் திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share