”அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சிறப்புமிக்கது. இது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கிடைத்த நீதி” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார். govt lawyer on judgement against gnanasekaran
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் அவரை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி தீர்ப்பளித்தார். மேலும் தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் சிறப்பம்சம் இதுதான்! govt lawyer on judgement against gnanasekaran
இதுதொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கிடைத்த நீதி. இதற்காக தான் நாங்கள் கடுமையாக உழைத்தோம். இன்று வழங்கியிருக்கும் தீர்ப்பில் 30 ஆண்டுகளில் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை என்பது தான் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இதில் வேறு எந்த சலுகை அடிப்படையிலும் அவர் சிறையை விட்டு வெளியே செல்ல முடியாது. அவர் சிறைக்குள் தான் இருக்க வேண்டும். அதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம்.
அதேபோன்று, ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையைத் தான் நீதிபதி வழங்கியுள்ளார். இதுதவிர அபாரதத் தொகையை இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குபடியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, அரசு எவ்வளவுத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளதோ, அதையும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். இது மிகவும் சிறப்பான தீர்ப்பு. அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என மேரி ஜெயந்தி தெரிவித்தார்.