அரசு மருத்துவரின் பாலியல் தொல்லையால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 5 நிரந்தர செவிலியர்கள், 14 தொகுப்பூதிய செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தனச்செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நிரந்தர செவிலியர் சுகர் மாத்திரையை அதிகளவு எடுத்துக்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமான சக ஊழியர்கள், பணியில் இருந்த டாக்டர் அபிராமியிடம் தூக்கி சென்றனர். தனச்செல்விக்கு அவசர சிகிச்சை அளித்தார் டாக்டர்.
அப்போது metformin என்ற 16 சுகர் மாத்திரையை அவர் முழுங்கி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையறிந்து பதறிப் போன செவிலியர்களில் ஒருவரான கவுரி உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் தனச்செல்வியின் குடும்பத்தினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து அவரை கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆர் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஐசியு வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவல் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஊத்தங்கரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று தனச்செல்வியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதில், “நான், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று ஊத்தங்கரை கலைஞர் நகரில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து கிருஷ்ணகிரி மருத்துவமனையில் 7 ஆண்டுகளாக ஸ்டாப் நர்ஸாக பணிபுரிந்தேன். கடந்த 8 மாத காலமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன்.
இந்த மருத்துவமனையில் மூத்த டாக்டராக மதன்குமார் இருந்து வருகிறார். இவர் பணி நேரத்தின் போது பணி செய்ய விடாமல் அவர் அருகிலேயே இருக்க சொல்வார். நோயாளிகளுக்கு ஊசி போடும்போது குனிந்தால் செல்போனில் என்னை போட்டோ எடுப்பார். பணி நேரம் முடிந்தும் தொடர்ந்து என்னை பணியில் இருக்க சொல்வார். எனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்தார். அலுவலக பதிவேடுகளை மறைத்து வைத்துக்கொண்டு அவற்றை தேட சொல்வார்.
இது சம்பந்தமாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குநரிடம் (ஜேடி) புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்து வந்ததால், என்னால் முடியாமல் கடந்த 7/10/2024 மாலை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்த 16 சுகர் மாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டேன்.
சிறிது நேரத்தில் மயக்கமுற்று கீழே விழுந்த எனக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு கவுரி ஸ்டாப் சிஸ்டர் மூலம் என் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த எனது அம்மா சந்திரா, சித்தி பையன் சிபிஸ்வரன், ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கிருந்து என்னை கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மேல்சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது நான் பேசும் நிலையில் உள்ளதால் ஊத்தங்கரை போலீசாராகிய நீங்கள் விசாரிக்க நான் நடந்ததை சொன்னேன். டாக்டர் மதன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை மட்டும் கடந்த 8ஆம் தேதி தனச்செல்வி குடும்பத்தினரிடம் போலீசார் வழங்கினர்.
இது சம்பந்தமாக தனச்செல்வி தாயார் சந்திரா நம்மிடம் கூறுகையில், “என் மகள் கவர்மெண்ட் மருத்துவமனைல வேல பாக்குறா. தேவையில்லாம மதன் டாக்டர் என் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரு. நிறைய டைம் ஜே.டிக்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணியும் நடவடிக்கை எடுக்கல. வேலைய விட்டு வீட்டுக்கு வந்தாலே… மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு வா… வானு கூப்டுவாரு மதன் டாக்டர்” என்று குற்றம்சாட்டினார்.

இது சம்பந்தமாக தமிழக அரசு மருத்துவமனை நிரந்தர செவிலியர்கள் மற்றும் தொகுப்பூதிய செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் மின்னம்பலத்திடம் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் 32,000 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒருசில மருத்துவமனைகளில் பெண் செவிலியர்களுக்கு சில ஆண் மருத்துவர்கள் இலை மறைவு காயாக பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். அந்த பெண் செவிலியர்களுக்கு பிள்ளைகள், குடும்பம் இருப்பதால் வெளியில் சொல்லமுடியாமல், புகாரும் கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள்.
ஊத்தங்கரை மருத்துவமனையின் மூத்த டாக்டர் மதன்குமார், அந்த செவிலியரை உடல் ரீதியாக பார்ப்பது, சீண்டுவது, தவறான கண்ணோட்டத்தில் செல்போனில் போட்டோ எடுப்பதுமாக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து தனச்செல்வி எங்களிடமே சொல்லியிருக்கிறார்.
நாங்கள் அந்த மருத்துவமனையில் உள்ள பெண் ஊழியர்களிடம் விசாரித்த போது, டாக்டர் மதன்குமார் மற்ற பெண் ஊழியர்களிடமும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
தான் சொல்வதை கேட்கவில்லை என்றாலோ, தனது செயலுக்கு ஒத்துவரவில்லை என்றாலோ ஜேடியிடம் சொல்லி மெமோ வாங்கி கொடுத்துவிடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறார்.
இதுதொடர்பாக சங்கத்தின் மூலமாக ஜேடியிடம் புகார் கொடுத்தோம். கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால், இதுவரை காவல்துறையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மாறாக ஜேடி தர்மர், என்னை தொடர்பு கொண்டு டாக்டர் மதன்குமார் நல்லவர். அந்த ஏரியாவில் எந்த பிரச்சினை என்றாலும் சமாளிக்கக் கூடியவர். அதனால் அவர் மீது நடவடிக்கை வேண்டாம். புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சமாதானப்படுத்துகிறார். தவறு செய்த டாக்டரை தண்டிக்காமல் பாதுகாக்க முயல்கிறார். அந்த டாக்டர் மதனுக்கு என்னதான் அரசியல் பின்புலம் இருக்கிறதோ என தெரியவில்லை” என்கிறார்.
அதுபோன்று “5 பெண் ஊழியர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய ஓரிடத்தில் விசாகா கமிட்டி இருக்க வேண்டும். ஆனால் ஊத்தங்கரை மருத்துவமனையில் விசாகா கமிட்டி இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
மதன்குமார் குறித்து ஊத்தங்கரை மருத்துவமனை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, “இந்த மருத்துவமனையில் மதன்குமார் சுமார் 15 ஆண்டுகளாக காது, மூக்கு, தொண்டை டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மீது எந்த புகார் சென்றாலும் மாவட்ட இணை இயக்குநராக வரக்கூடியவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தோ டாக்டர் தியாகராஜன் பணி செய்ய வந்தார்.
டாக்டர் மதன்குமாரின் ஆதிக்கத்தாலும், தொடர் தொல்லைகளாலும் சிறப்பாக சேவை செய்யக்கூடிய டாக்டர் தியாகராஜன் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார்” என்று கூறுகிறார்கள்.
ஜே.டி தர்மரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த செவிலியர் சொல்வது போல், அவர் சுகர் மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் ஊத்தங்கரை மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது மாத்திரைகள் குறையவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை நான் நேரில் சென்று விசாரித்தேன். அவரது மருத்துவ ரிப்போர்ட்டை பார்த்தேன். அவருக்கு ரத்த அழுத்தம், சுகர் ஆகியவை நார்மலாக இருந்தது.
ஆனால், அவர் ஆக்சிஜன் சப்போர்ட்டில் இருந்தார். அங்கிருந்த டாக்டர்களிடம் எதற்காக ஆக்சிஜன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதற்கு அவர்கள் மழுப்பலாக பதில் அளித்தார்கள். அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்துவதற்காக தனியார் மருத்துவமனையினரும், இந்த செவிலியரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள்.
ஊத்தங்கரை மருத்துவமனையில் 125 பெட் உள்ளன. 250 பெட்ஷீட்கள் உள்ளன. நாள்தோறும் கலர் கலராக பெட்ஷீட்டை மாற்ற வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்வதே கிடையாது. மேலும், புகார் கொடுத்த செவிலியர் பணக்காரர். 4 மாதங்களுக்கு முன்பு எங்களிடம் அந்த செவிலியரும், செவிலியர் சங்கத்தினரும் ஒரு புகார் கொடுத்தனர். அதில் பாலியல் தொல்லை என குறிப்பிடப்படவில்லை. அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த மருத்துவர் எந்த தவறும் செய்யாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு மற்றும் மருத்துவ துறை இயக்குநரிடம் தகவல் சொல்லிவிட்டேன். அவர்கள் விசாரித்து அறிக்கை மட்டும் கொடுக்க சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்க நாம் டாக்டர் மதன்குமாரை தொடர்புகொண்டோம். அவரது கைப்பேசி எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் பதிலளித்தால் அதையும் மின்னம்பலத்தில் பிரசுரிக்கிறோம்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிஸ்டு கால் கேட்கும் பாஜக: மாணவர்கள் ஐடி கார்டு கேட்கும் திமுக!
உலக அழகிக்கே இந்த நிலையா? மற்றொரு நடிகையுடன் அபிஷேக் பச்சனுக்கு தொடர்பு?