போக்குவரத்து ஊழியர்கள் உடனான பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 7) தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15வது ஊதிய ஒப்பந்தம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 27 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன.
ஆனால் மக்களின் இன்னலை கருதி பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எடுக்குமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இதனையடுத்து 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதன் தொடர்ச்சியாக 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது.
இதில் 27 தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் பங்கேற்ற நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது!
கூட்டத்திற்கு பின்னர் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய பேச்சுவார்த்தையில் ஓய்வூதியதாரர்கள் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. 15வது ஊதிய உயர்வு குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் வரும் பிப்ரவரி 21-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு பஸ் ஓட்டை வழியே விழுந்த பெண் : உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
Comments are closed.