கடலூர் அருகே நடந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்னை – திருச்சி, சென்னை – சேலம் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நேற்று மாலை கடலூர் அருகே நடந்த விபத்து செய்தி வாகன ஓட்டிகள், பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சியில் இருந்து நேற்று (டிசம்பர் 25) பிற்பகல் அரசு பேருந்து(SETC) சென்னை நோக்கி புறப்பட்டது.
இந்த பேருந்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் வலதுபக்க டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது.
பேருந்து, செண்டர் மீடியனை தாண்டி எதிர்பக்கம் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பாய்ந்து சாலையின் பள்ளத்தில் நின்றது.
இதனிடையே பேருந்து செண்டர் மீடியனை தாண்டிய போது எதிர் திசையில் திருச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த இரு கார்கள் மீது மோதியதில் அந்த கார்கள் பலத்த சேதமடைந்தன.
காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் காப்பாற்ற ஓடி வந்தனர். ஆனால் கார்கள் அப்பளம் போல் நொறுங்கியிருந்ததால் உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வர முடியவில்லை.
இந்தசூழலில் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வந்து இரு கார்களில் இருந்தவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர், சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விபத்துக்குள்ளான ஒரு காரில் பயணித்த, கரூர் சின்ன ஆண்டான் கோயில் சுப்பையா பிள்ளை லே-அவுட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜரத்தினம்(67), அவரது மனைவி ராஜேஸ்வரி(57), கார் டிரைவரான ஜெயக்குமார்(30) உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு காரில் பயணித்த புதுக்கோட்டை மாவட்டம் கரீப் நகரை சேர்ந்த முகமது காசிம் மருமகள் குருஷித் பாத்திமா, மகள் ரியானா, மருமகன் முகமது பாரூக், பேத்திகள் அப்துல் பத்தா, பர்தா மற்றும் கார் ஓட்டுநர் துரை ஆகியோரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த முகமது காசிம், அவரது மனைவி ரஷிதா பேகம், பேரக் குழந்தைகள் அப்துல் அஜீஸ், அப்துல் அகர் ஆகிய 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முகமது காசிம் மருமகன் பாரூக் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடு சென்றுள்ளார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோதுதான் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்தை கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நானும் எஸ்.பியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆர்டிஓவை விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம். அதன்பிறகுதான் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும்” என்றார்.
முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தசூழலில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்தின் ஓட்டுநர் தாஹா அலி மீது கவனக்குறைவு, அதிவேகம், மரணத்தை ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீசார், அவரை இன்று (டிசம்பர் 25) கைது செய்தனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி
அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
ஒரே நொடியில் தங்களின் அன்பு உறவுகளை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். இத்தகைய கொடூரமான விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில், அரசு பேருந்துகளின் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
சமீபகாலமாக, அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், மிகவும் அதிகரித்திருக்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் அரசு பேருந்து விபத்துகள், பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இந்த தொடர் விபத்துகள். அரசுப் பேருந்துகள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த மாதமே, அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த அலட்சியத்தைப் பற்றி எச்சரித்திருந்தோம். ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு தான் நேற்றைய பேருந்து விபத்து. தொடர் விபத்துக்களையும், அது தொடர்பான எச்சரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய திமுக அரசே இந்த விபத்துக்கான முழு பொறுப்பு.
