கோவி.லெனின்
ஜப்பான் பயணப் பதிவுகள் 25
மயக்கும் மாலையும் இனிக்கும் இரவுமாக அன்றைய பொழுது அமைந்த நிலையில், நண்பர்கள் விடைபெறும் நேரத்தில், அவர்களிடம் ஓர் உதவி கேட்டு என் அறைக்கு வரச்சொன்னபோது, “என்ன உதவி?” என்ற ஆர்வம் அவர்களின் குரலில் வெளிப்பட்டது.
“வாங்க சொல்றேன்..” என்று ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றேன். Ward robeஐ திறந்தேன். ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்தது வெள்ளை நிற யுகாதா (yukata). அதை நான் எடுக்கும்போதே கமலும் விஜய்யும் புன்னகைத்தனர்.
ஜப்பானியர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்று, யுகாதா. குளிக்கச் செல்வதற்கு முன்பு, படுக்கைக்குப் போகும் பொழுது, வீட்டுக்குள் உலவும்போது, சாப்பாட்டு மேசையில் உட்காரும்போது எனப் பல நேரங்களிலும் அணிந்துகொள்ளக் கூடிய எளிய ஆடை அது. நம் ஊர்க்காரர்களின் பார்வைக்கு, அசப்பில் கராத்தே டிரஸ் போலத் தெரியும். ஜப்பானிய ஓட்டல் அறைகளில் நிச்சயம் ஒரு யுகாதா இருக்கும். நாம் அதைப் பயன்படுத்திவிட்டு, குளியலறையில் ஓரமாகப் போட்டுவிட்டால், ரூம் சர்வீஸ் செய்பவர்கள், புதிய யுகாதாவை wardrobeல் மாட்டி வைத்துவிடுவார்கள்.

ஜப்பானில் இருந்த நாட்களில் ஒரு நாள் இரவும் யுகாதாவை அணியவில்லை. எனக்கு வசதியான கைலி, பனியன் என்று இருந்துவிட்டேன். ஜப்பானுக்குப் புறப்படும்போதே, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் உதவியாளர் ஐயப்பன், “எப்படியாவது அந்த டிரஸ் போட்டு ஒரு ஃபோட்டோ எடுத்திடுங்க. அதுதான் ஜப்பான் போனதற்கான அடையாளம்” என்று சிரித்தார். தமிழ்நாடு முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜப்பானுக்கு வந்தபோது உதவியாளரும் வந்திருந்தார். முதலீட்டாளர்கள் சந்திப்பு, ஜப்பானியத் தமிழர்களுடனான சந்திப்பு எனத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் இருந்த நிலையில், ஐயப்பனின் ஜப்பான் நினைவுகளில் முதலிடம் பெற்றது, அவர் அறையில் இருந்த யுகாதா தான். அந்தப் படத்தையும் காட்டி மகிழ்ந்திருந்தார். நானும் அவரைப்போல யுகாதா அணிந்து, நண்பர்களிடம் படம் எடுக்கச் சொன்னேன். ஜப்பான் பயணம் முழுமை பெற்றது.
நண்பர்கள் விடைபெற்றுச் சென்றபின், மறுநாள் பயணத்திற்கேற்ப பெட்டியை ரெடி பண்ணி வைத்துவிட்டுப் படுத்தேன். கமாகுரா வரையிலான பயணக்களைப்பு, விருந்து உற்சாகம், 5 நாள் நிகழ்வுகளின் நினைவுகளுடன் உறங்கி, அதிகாலையில் எழுந்தேன். நல்ல இதமான வெந்நீர்க் குளியல். குளிக்கும் அறையில் இருந்த bath tub, “நேற்று நைட் யுகாதாவை அணிந்து பார்த்துட்டே.. ஆனா, 5 நாளில் ஒருநாள் கூட என்னோடு நீ இல்லைல” என்று பரிதாபமாகக் கேட்பது போல இருந்தது. ஜப்பானியர்கள் பொதுவாக இரவு நேரத்தில் bath tubல் குளிப்பதை விரும்புவார்கள் என்று நண்பர்கள் சொல்லியிருந்தனர். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களால் அந்த வாய்ப்பு எனக்கு அமையவில்லை. வழக்கம்போல குளித்துவிட்டு, ஆயத்தமாக இருந்தேன்.
நண்பர்கள் டோக்கியோ செந்திலும், கமலக்கண்ணனும் அறைக்கு வந்து அழைத்தனர். நரித்தா விமான நிலையத்தை நோக்கி, காலை நேர கார் பயணம். ஜப்பானின் தெருக்களும் கட்டடங்களும் சாலையோர மரங்களும் ‘சயோனரா’ (bye bye) என விடைகொடுப்பது போல இருந்தன. ‘அரிகாதோ ஹொசைமாஸ்’ என்று என் மனது நன்றி சொன்னது. ஜப்பானில் 5 நாட்கள் முழுமையாக ரசித்த இடங்கள் மனதில் நிரம்பி வழிந்தன. Cherry blossom எனப்படும் ஊரெல்லாம் மரங்கள் பூத்து நிற்கும் வசந்தகால அழகை மட்டும்தான் நேரில் பார்க்க முடியவில்லை. பருவம் தப்பிப் பயணித்திருந்தேன். “சின்னப்பூ.. சின்னப்பூ.. கண்ணெல்லாம் வண்ணப்பூ” என்ற எஸ்.ஜானகியின் குரல், இளையராஜாவின் இசையுடன் சேர்த்து மனதில் ஒலித்து, cherry blossom ஜப்பானை மனதிற்குள் மலர வைத்தது.

வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த காபியைக் கொடுத்தார் செந்தில். தென்னிந்திய காபி. அதுவும் தஞ்சாவூர் ஜில்லா பாணி காபி. இனி சுஷி, சோபா, சாஷ்மி, ஷாபு-ஷாபு எல்லாம் சாப்பிட முடியாது. இட்லி, பொங்கல், உப்புமாதான் நாளையிலிருந்து என்றது மனது. அதற்கென்ன குறைச்சல்.. அசத்தலா இருக்கும் என்றது காபியின் மணம்.
“காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி’ என்று எம்.எஸ்.வி. இசையில் கண்ணதாசன் வரிகளைப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. ‘நினைத்தாலே இனிக்கும்’ அந்த வரியில், நியூயார்க்கின் காபரே மட்டும் பாக்கி. மற்ற இரண்டும் நிறைவேறிவிட்டன. அதிலும், தமிழ்ச்சுவையுடன் கூடிய ஜப்பான் கூடுதல் சிறப்பு.
நாரிதா விமான நிலையத்தை அடைந்திருந்தோம். லக்கேஜ் செக்கிங் இடம்வரை வழியனுப்புகிறவர்களையும் அனுமதிக்கிறார்கள். கமலும் செந்திலும் கூடவே வந்தனர். போர்டிங் பாஸ் போடும்போது, “வலதுபக்க window சீட்” என்று கவுன்ட்டரில் சொன்னார்கள். நான் அவர்களைப் பார்த்தேன். “ஒரு வியூ கிடைக்கும் பாருங்கள்” என்றனர்.

செந்தில் தனது புத்தகத்தைப் பரிசாக வழங்கி அனுப்பிவைத்தார். சென்னையில், என்னை ஜப்பான் நிகழ்வுகளுக்காக அழைக்க வந்தபோதே தனது புத்தகங்களை வழங்கியிருந்தார் கமல். பயணத்தை இனிமையாகவும் அமைத்து தந்திருந்தார். நண்பர்கள் இருவரும் மனநிறைவான புன்னகையுடன் விடை பெற்றனர். செக்யூரிட்டி செக்கிங் கடந்து, ஷாப்பிங் ஏரியாவில் சில பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வந்தேன்.
டேக் ஆஃப் ஆனபோது, டோக்கியோவின் நிலத்தையும் கடலையும் வானிலிருந்து பார்ப்பது புது இன்பமாக இருந்தது. 5 நாட்கள் பயணத்தில் நாம் சென்று பார்த்த இடங்கள் தெரிகிறதா என்று கண்கள் தேடின. கொஞ்ச நேரத்தில், அந்த அற்புதம் தெரிந்தது. வலது ஓர ஜன்னல் சீட்டை நண்பர்கள் கேட்டு வாங்கியதற்கு காரணம், ஜப்பானின் இயற்கைக் கொடையும் ஜப்பானியர்கள் புனிதமாகக் கருதும் எரிமலையுமான ஃப்யூஜியை வானத்திலிருந்து பார்த்தபோது பரவசமடைந்தேன். கருத்த நிறத்தில் பிரம்மாண்ட காந்தம் போலக் கண்களைக் கவர்ந்தது ஃப்யூஜி.

விமானம் கடல் மீது பறக்கத் தொடங்கியிருந்தது. உதயசூரியன் நாடு என்ற பெயர் கொண்ட ஜப்பான் நாட்டிலிருந்து, உதயசூரியன் ஆட்சி செய்யும் தமிழ்நாடு நோக்கிய பயணம்.
நெஞ்சில் ததும்பிய நினைவுகளுடன், நண்பர் செந்தில் பரிசாகத் தந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். அது சிறுகதைத் தொகுப்பு. பெயர், ‘இசூமியின் நறுமணம்’. இதயமெங்கும் ஜப்பான் நினைவுகளின் நறுமணம்.
அரிகாதோ-நன்றி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: மறக்க முடியாத இரவு!– 24
உதயசூரியன் நாடு: புத்தருக்குள் புகுந்தேன்! -23
உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா? -22
உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!- 21
உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!-20
உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு! -19
உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
