உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா?

Published On:

| By Kavi

Govi Lenin japan travel story 22

கோவி.லெனின் Govi Lenin japan travel story 22

ஜப்பான் பயணப் பதிவுகள் 22

இரவு நேர டோக்கியோவில் மயங்கிவிட்டு, சின்ன இந்தியா எனப்படும் டோக்கியோ நிஷிகசாய் பகுதியின் ஸ்மைல் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது நேரம் கடந்திருந்தது. சிறிது நேரம்தான் தூக்கம் என்றாலும் அமைதியான தூக்கம். பொழுது விடிந்த கொஞ்ச நேரத்தில், நண்பர் விஜய் போன் செய்தார்.

“நீங்க பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு ரெடியா இருங்க. நான் வந்திடுறேன்” என்றார்.

ஹோட்டல் ஸ்மைலியில் காம்ப்ளிமென்ட்ரி பிரேக்ஃபாஸ்ட் ரெடியாக இருந்தது. பிரட், பட்டர், ஜாம்தான் உலகளாவிய கூட்டணி. அதனுடன் வெஜ் சாலட் சேர்ந்தது. பக்கத்தில் இருந்த சாசேஜ், “என்னைத் தொட மாட்டாயா?” எனக் கேட்பது போல இருந்தது.

நன்கு அரைக்கப்பட்ட இறைச்சியை வேகவைத்து செய்யப்படுவதுதான் சாசேஜ். கோழிக்கறி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி இவற்றில் ஏதேனும் ஒரு இறைச்சியில் செய்யப்பட்டிருக்கும். சிவந்து தடித்த விரல்கள் அளவிற்கு இருக்கும். இது, மேற்கத்திய உணவு வகைகளில் ஸ்பெஷலானது. இரண்டு சாசேஜ்களை எடுத்து வைத்துக்கொண்டேன். அவித்த முட்டைக்கும் தட்டில் இடமிருந்தது.

ஜப்பான் உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவு நிறைவு பெற்றுவிடுமா? சுஷி இருந்தது. அதுவும் சேர்ந்தே வயிற்றை நிறைத்தது. ஒரு கப் ப்ளாக் காஃபி மொத்த உணவுக்கும் கூடுதல் சுவை சேர்த்தது.

நண்பர் விஜய் அழைத்தார். ஹோட்டல் வாசலில் கார் ரெடியாக இருப்பதைத் தெரிவித்தார். மற்ற நண்பர்கள் அவரவர் அலுவலில் இருந்தனர். எழுத்தாளர் சாருவுடன் புல்லட் ரயிலில் ஒசாகா-ஹிரோஷிமா நகரங்களுக்குப் பயணித்திருந்தார் செந்தில். அதனால், இன்றைய பொழுது விஜய்யுடன்தான்.

“கமாகுரா போறோம்” என்றார். Govi Lenin japan travel story 22

டோக்கியோவின் அழகை ரசித்து செல்கிற வகையில் நேர்த்தியாகக் காரை ஓட்டினார். கமாகுராவுக்கு கிட்டத்தட்ட 70 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். காலை நேர டோக்கியோ நகரத்தின் பரபரப்பைக் கடந்து செல்ல வேண்டும். சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற ஜப்பானியர்களின் நடமாட்டத்தைக் கவனித்தபடியே பயணம் தொடர்ந்தது. பெட்ரோல் பங்க், டோல்கேட் உள்பட எல்லாமே தானியங்கிதான். தொழில்நுட்பச் சிக்கல்களைக் கையாள்வதற்கு மட்டும் ஓரிரு ஆட்கள் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி, ஜப்பானிய கிராமங்கள் வழியே பயணம் தொடர்ந்தது. வயல்வெளிகளில் நெல் விளைந்திருந்தது. காய்கறிகள் பயிரிட்டிருந்தனர். எந்த நாடாக இருந்தாலும், கிராமங்கள் என்றால் பசுமைதானே..

எளிமையான அழகிய வீடுகள், மரங்கள் அடர்ந்த பகுதிகள், பசுமை கொஞ்சும் நிலங்கள், கருத்த பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற தரமான சாலைகள் எனப் பயணத்தைத் தொடர்ந்தபோது, வழியில் சின்னச் சின்ன ஊர்களையும் அங்கு வாழும் மக்களின் தன்மையையும் காணமுடிந்தது.

இடதுபுறத்தில் இருந்த ஒரு கட்டடத்தைக் காட்டினார் விஜய். அது ஜப்பானிய உள்ளாட்சி அமைப்பு ஒன்றின் அலுவலகம். நம்ம ஊரில் உள்ள நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகம் போன்ற கட்டடம். அதன் சுவரில், ஒரு குறிப்பிட்டப் பகுதி போஸ்டர்கள் ஒட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

“அரசியல் கட்சிகள் இங்கேதான் போஸ்டர் ஒட்டி தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். அதைப் பார்த்து மக்கள், எந்தக் கட்சியை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பார்கள்” என்றார்.

Govi Lenin japan travel story 22

இதுபோல அங்கீகரிக்கப்பட்ட பகுதியில்தான், எல்லாக் கட்சிகளும் ஒரே அளவிலான போஸ்டர்களை ஒட்டவேண்டும் என்பது ஜப்பான் தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஃப்ளக்ஸ் போர்டு, கொடி, தோரணம், மாநாட்டு மேடை இதெல்லாம் ஜப்பானியத் தேர்தலில் பெரியளவில் கிடையாது. தேர்தல் செலவுகளுக்கு நிறைய கட்டுப்பாடு உண்டு.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் போஸ்டர் ஒட்டலாம். வாகனங்களில் குறைந்த ஒலியுடன் பிரச்சாரம் செய்யலாம். தெருமுனைப் பரப்புரை செய்யலாம். ரயில்வே ஸ்டேஷன் போன்ற மக்கள் நடமாடும் இடங்களில் ஓரமாக நின்று பேசலாம். மக்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படக் கூடாது. அதுபோல, வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பதும் ஜப்பானில் அனுமதிக்கப்படுவதில்லை. பரிசுப் பொருட்கள்-டோக்கன்கள்-பிரியாணி பொட்டலங்கள்-இத்யாதிகள் கொடுத்து கூட்டம் சேர்ப்பதற்கோ, ஓட்டு வாங்குவதற்கோ வாய்ப்பே இல்லை.

ஜப்பானில் இப்போதும் மன்னர் பரம்பரை இருந்தாலும், ஜனநாயகமே அங்கே முதன்மையாக உள்ளது. மக்கள் வாக்களிப்பில் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசன்டேட்டிவ்ஸ், ஹவுஸ் ஆஃப் கவுன்சிலர்கள் என்ற இரண்டு அவைகள் கொண்ட ஜனநாயக அமைப்பு செயல்படுகிறது. இந்த உறுப்பினர்களைக் கொண்ட நேஷனல் டைரி மூலம் ஜப்பானிய பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். மன்னர்தான் பிரதமரை அறிவிப்பார். 4 ஆண்டுகாலம் அவர் பதவி வகிப்பார்.

ஜனநாயக நெறிமுறைகளை பெருமளவு சரியாகக் கடைப்பிடிக்கும் நாடுகளின் வரிசையில் ஜப்பான் உள்ளது. மக்கள் நலன் சார்ந்தே சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. சட்டத்தை மக்கள் மீது திணிப்பது என்பதைவிட, சட்டத்தை மக்கள் புரிந்துகொண்டு செயல்படச் செய்வது என்பதே ஜப்பான் ஜனநாயகத்தின் சிறப்பு. கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் முகக்கவசம் (மாஸ்க்) என்பது கட்டாயமாக இருந்தது. ஜப்பான் அரசாங்கம் தனது மக்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உலக நடைமுறையை அறிவிப்பாக வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு கட்டுப்பட்டு, ஜப்பானிய மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டனர். தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல் இவற்றுக்கேற்ப சட்டங்களை வகுத்து செயல்படுத்தும் ஜனநாயக அமைப்பு முறை ஜப்பானில் உள்ளது. எல்லா நாடுகளிலும் உள்ள அரசியல் போட்டி, பகை ஆகியவையும் ஜப்பானில் உண்டு. வளர்ந்த நாடுகளுக்குரிய ஜனநாயக முதிர்ச்சியும் அங்கே உண்டு.

அரசியல் குறித்து பேசியபடியே ஜப்பானிய கிராமங்களின் வளைந்து செல்லும் பாதைகளில் பயணித்து ஒரு ரெஸ்டாரண்ட்டில் நல்ல காஃபி சாப்பிட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். குகைப் பாதைகள் குறுக்கிட்டன. மலைகளை வெடிவைத்து தகர்த்துச் சிதைக்காமல், நவீனத் தொழில்நுட்பத்தில் அதனைக் குடைந்து, நிலச்சரிவு ஏற்படாதபடி கனமான இரும்புத் தடுப்புகளை அமைத்திருந்தனர். சின்னச் சின்ன குகை போன்ற பாதைகளில் பயணிப்பது இனிமையாக இருந்தது.

டோக்கியோவிலிருந்து புறப்பட்டு ஒன்றரை மணிநேரம் கடந்திருந்தது. கடலோர நகரமான கமாகுராகுரா பகுதிக்கு வந்திருந்தோம். ஜப்பானில் பெரிய-சிறிய நகரங்கள் எதுவாக இருந்தாலும் கார் பார்க்கிங்கைத் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். பார்க்கிங் கட்டணம் மாறுபடுகிறது. கட்டண வசதிக்கேற்ற வகையில், இடத்தைப் பார்த்து நிறுத்தவேண்டும். எவ்வளவு நேரம் பார்க்கிங் செய்கிறோமோ அதற்குரிய கட்டணத்தை தானியங்கியில் செலுத்திய பிறகே காரை எடுக்க முடியும். அதற்கேற்ற லாக்கிங் சிஸ்டத்துடன் பார்க்கிங் ஏரியாக்கள் உள்ளன.

கடல் பார்க்கும் வகையில், விஜய் தனது காரை நிறுத்தினார். இருவரும் கமாகுராவின் குறுகலான தெருக்களில் நடந்தோம். சற்று நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த அந்த இடத்தை அடைந்தோம்.

Govi Lenin japan travel story 22

கண்ணெதிரே பிரம்மாண்டமாக உட்கார்ந்திருந்தார் ஜப்பானின் புகழ் பெற்ற புத்தர்.

(விரியும் வரும் ஞாயிறு அன்று)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு

Govi Lenin japan travel story 22

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்! – 21

உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!-20

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு 19!

உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது? = 18

உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17

உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15

உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14

உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13

உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12

உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11

உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10

சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9

உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share