மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் என்ற நபர் அடிக்கடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றதாக வாயிற்காவலர்கள் சொல்கிறார்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று (டிசம்பர் 27) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அண்ணா பல்கலைக்கழக மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த குறுகிய நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தான் கல்லூரிகளில் செயல்படும் போஷ் கமிட்டியின் வேலை.
காவல்துறையில் மாணவி புகார் கொடுத்த பிறகு தான் கல்லூரியில் செயல்படும் போஷ் கமிட்டிக்கு தகவல் வந்தது. இந்த புகாரை விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாணவி விவகாரத்தை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு உயர்கல்வித்துறையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம்.
கைதான ஞானசேகரன் என்ற நபர் அடிக்கடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றதாக வாயிற்காவலர்கள் தெரிவிக்கிறார்கள். அவரது மனைவி பணி நிரந்திரம் இல்லாத பணியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
எனவே தான் அவரை சந்தேகப்படும் சூழல் வாயிற்காவலர்களுக்கு இல்லை. முழு விசாரணை நடைபெற்று வருகிறது. பிளாட்பார்ம் ஓரத்தில் பிரியாணி கடை வைத்திருப்பதால் மாணவர்கள் பலருக்கு ஞானசேகரனை தெரியும் என்கிறார்கள். அவர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில், மாணவ, மாணவியர் விடுதி, சாலைகள், உணவகம் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா இருக்கிறது. 100-க்கு 80 சதவிகிதம் சிசிடிவி-க்கள் சரியாக செயல்படுகிறது.
ஆனால், சம்பவம் நடந்த முட்புதர் பகுதியில் சிசிடிவி இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து இடங்களிலும் விளக்குகள் மற்றும் சிசிடிவி-க்கள் 100 சதவிதம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…