சிறப்புக் கட்டுரை: நியமன ஆளுநர் பதவி என்ற காலவழு!

Published On:

| By admin

ராஜன் குறை

இலக்கணத்தில் நிகழ்காலமும், இறந்தகாலமும், எதிர்காலமும் ஒரு வாக்கியத்தில் கலந்து, குழம்பி வந்தால் அதை காலவழு என்பார்கள். “நான் இப்போது எழுதிக்கொண்டிருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டேன்” என்று எழுதினால் அது காலவழு. “நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் முடித்து விடுவேன்” என்று எழுத வேண்டும். அதுபோல இந்திய அரசியலமைப்பில் இறந்தகாலமும், நிகழ்காலமும் குழும்பி நிற்கும் ஒரு நிலைதான் ஆளுநர் பதவி என்பது. அதில் காலனீய காலத்தின் எச்சம் கலந்துள்ளது. இந்தியக் கூட்டாட்சி குடியரசின் ஒன்றிய அரசு காலனீய கால அரசுபோல நடந்துகொள்ளும் சாத்தியத்தை உருவாக்குகிறது. ஆங்கிலத்தில் இத்தகு நிலையை அனக்ரானிசம் (Anachronism) என்பார்கள்.
சமீப காலமாக ஒன்றிய அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சி நியமிக்கும் ஆளுநர்கள் பல்வேறு மாநிலங்களிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுக்கட்சி மாநில அரசுகளின் செயல்பாட்டினை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தும் விதமாக, தலையிடும் விதமாக, முடக்கும் விதமாக ஆளுநர்களின் செயல்பாடு அமைந்துவிடுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்படும்போது இருந்த சூழலில் ஆரோக்கியமான மரபுகள் தீர்மானிக்கும் என்று நினைத்து திட்டவட்டமாக வரையறுக்கப்படாமல் விடப்பட்ட இடைவெளிகளை ஒன்றிய அரசின் அதிகாரத்தால் நிரப்பும் பணியினை ஆளுநர்கள் செய்கின்றனர். இது மாநில அரசின் மீது, ஒன்றிய அரசு செலுத்தும் அதிகாரமாக மாறி கூட்டாட்சி தத்துவத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
இப்போது தமிழ்நாட்டின் நிலையைப் பரிசீலித்தால் பிரச்சினை துல்லியமாக விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குத்தான் வாக்களித்தார்கள். முப்பத்தொன்பது பிரதிநிதிகளில் முப்பத்தெட்டு பேர் அந்தக் கூட்டணிதான். தமிழ்நாட்டு மக்கள் தேர்வின்படி ஒன்றிய அரசில் ஆட்சி செய்ய வேண்டியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான். ஆனால், வடமாநில மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு அதிகம் வாக்களித்ததால் ஒன்றிய அரசின் ஆட்சியதிகாரம் பாரதீய ஜனதா கட்சிக்குச் சென்றுவிட்டது. அடுத்து நடந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் திமுக கூட்டணிக்குத்தான் பெருவாரியாக வாக்களித்தார்கள். மாநிலத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ளது.
இந்த இரண்டு தேர்தல்களிலும் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியும் ஒரு காரணம். இவ்வாறு தமிழக மக்களின் முழுமையான ஆதரவை நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிலும் பெற்றாலும் திமுக, நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது என்று சட்டமியற்றி அனுப்பினால் அதை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார்; மீண்டும் சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றி அனுப்பினால் அதை கிடப்பில் போட்டுவிட்டு எதுவும் கூறாமல் காலம் கடத்துகிறார். இது மக்களாட்சி அமைப்பில் தமிழக மக்களின் தேர்வுக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. காலனீய ஆட்சி காலத்தில் இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக ஆட்சி செய்த ஆளுநரை போல, மக்களாட்சி காலத்தில் ஒன்றிய அரசை ஆளும்கட்சியின் பிரதிநிதியாக ஆள்பவர் ஆளுநர் என்றால் தமிழக மக்களின் உரிமைகள் என்னாவது? தமிழ்நாடு ஒன்றிய அரசின் ஆட்சிக்குட்பட்ட காலனியா அல்லது மக்களாட்சி தத்துவத்தின்படி சுயாட்சி அதிகாரம் உள்ள அரசா? ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. முரசொலி ஏடு ஆளுநர் ரவியின் தான்தோற்றித்தனமான போக்கைக் கடுமையாகக் கண்டித்து தலையங்கம் தீட்டியுள்ளது.
இந்த நியமன ஆளுநர் பதவி என்ற காலவழுவின் பின்னணி என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT


**சட்டத்தின் ஆட்சியும், மக்களாட்சியும்**
மன்னராட்சி காலத்தில் மன்னர் இறைவனின் பிரதிநிதியாக, ஆசி பெற்றவராக ஒட்டுமொத்த மக்களையும் ஆட்சி செய்வார். மன்னர் சார்ந்துள்ள மதமும், மத குருமார்களும் கூறும் தர்ம நியாயத்தின்படி, அமைச்சர்கள் ஆலோசனைப்படி ஆட்சி செய்வார். இப்படி மன்னரிடம் குவிந்துள்ள அதிகாரத்தை மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளித்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் ஆட்சி செய்வார்கள் என்பது மக்களாட்சி. எந்த தர்ம நியாயங்களின்படி ஆட்சி செய்வார்கள் என்ற கேள்வி எழும்போதுதான், மக்கள் பிரதிநிதிகள் கூடும் அவை, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் இயற்றும் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்வார்கள் என்று பெறப்பட்டது. இந்த நடைமுறைகளையே அரசியலமைப்பு சட்டமாக்கினால்தான் அதன் அடிப்படையில் குடியரசு என்பது உருவாகி, அது மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களை நடத்தி, பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரிடம் ஆட்சியதிகாரத்தை வழங்க முடியும். எனவே அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் குடியரசு என்ற மேடையில், மக்களாட்சி என்ற செயல்பாடு நடைபெறும். அதனால் குடியரசு என்ற தேசத்தின் அடிப்படை நிர்வாக வடிவத்தை, சட்டத்தின் ஆட்சியைக் குறியிடுபவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார். இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையே இந்தக் குறியீட்டுத் தலைமையை வகிக்கிறது. ஆனால் ஆட்சியதிகாரம் முழுவதும் பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் ஆதரிக்கும் ஆட்சி மன்றத் தலைவரான பிரதமரிடம்தான் இருக்கும். ஆட்சி மன்றம் அனுப்பும் சட்ட வரைவுகளை மீண்டும் பரிசீலிக்க குடியரசுத் தலைவர் கோரலாமே தவிர, அதே சட்டம் மீண்டும் ஆட்சி மன்றத்தால் அனுப்பப்பட்டதும் அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பிரதமர் பெரும்பான்மை ஆதரவை இழக்கும் சந்தர்ப்பங்களில், குடியரசுத் தலைவர் இடைக்கால அரசை நியமிக்கும் அதிகாரம் உடையவர். அதேபோல மாநிலங்களிலும் அரசு பெரும்பான்மை இழந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி, அதாவது அவர் பிரதிநிதியாக கவர்னர் ஆட்சியை நடத்தும் நிலை உருவாகலாம்.
குறியீட்டு அதிகாரம் ஆனாலும், குடியரசுத் தலைவர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு மக்களாட்சியில் ஒருவரை எப்படி தேர்ந்தெடுப்பது? இங்கிலாந்து போல மன்னர் பரம்பரையை வைக்க இந்தியாவில் சாத்தியமில்லை (எந்த மன்னரை வைப்பது என்பது முதல் கேள்வி). அதேபோல யாராவது ஒருவரை நியமனம் செய்வதும் சரியாக இருக்கிறது. மேலும் அப்படி நியமனம் செய்யும் அதிகாரத்தை யாருக்குக் கொடுக்க முடியும்? குடியரசுத் தலைவரைவிட அதிகாரமிக்கவராக யாரை கூற முடியும்? சரி, மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்றால் பின்னர் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். அதனால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய எலக்டரல் காலேஜ் என்னும் தேர்தல் மன்றம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வென்றவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இந்த தீர்வின் சாதகம் என்னவென்றால் குடியரசுத் தலைவரும் தேர்தலில் வென்றவராக இருப்பார்; ஆனால் ஆளும்கட்சி நியமித்தவராக இல்லாமல் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளும் தேர்ந்தெடுத்தவராக இருப்பார். இப்படி மறைமுகத் தேர்தலில் வெல்பவர் முக்கியத்துவம் வாய்ந்த குறியீட்டு அதிகாரத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார். இவ்வாறாக இந்திய ஒன்றியக் குடியரசின் தலைவரைப் பொறுத்தவரை பொருத்தமான தீர்வை அரசியலமைப்பு சட்டம் கண்டது. ஆனால் மாநில ஆளுநர்கள் என்று வரும்போது, அவர்களை குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிப்பார் என்று நியமனப் பதவியாக மாற்றிவிட்டது.

ஒன்றிய அரசைப் போன்றதுதான் மாநில அரசும். இதிலும் சட்டத்தின் ஆட்சியை குடியரசுத் தலைவர் போல குறியீடு செய்பவர் ஆளுநர். பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர் முதலமைச்சர். மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இறையாண்மையை பகிர்ந்துகொள்கின்றன. மாநில அரசுகள் இணைந்ததுதான் ஒன்றிய அரசு; அதனால்தான் நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் அவை (இந்தியில் ராஜ்ய சபா) என்று தனியாக ஓர் அவை உள்ளது. மக்களவை உறுப்பினர்களை மக்கள் தொகுதிவாரியாக நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். எந்த ஒரு சட்டமும் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
இவ்வாறு தனக்கென பல்வேறு வாழ்வியல் துறைகளில் இறையாண்மை உள்ள மாநில அரசின் அரசியல் சட்ட தலைவரை, ஆளுநரை, ஒன்றிய அரசு நியமிப்பது என்பது ஒன்றிய அரசை பேரரசு போலவும், மாநில அரசை குறுநில அரசு போலவும் மாற்றுகிறது. இது மக்களாட்சிக்கு உகந்ததல்ல. இதற்கான காரணம் காலனீய அரசின் முன் மாதிரிதான். இங்கிலாந்து அரசு இந்தியாவை நேரடியாக ஆட்சி செய்ய தொடங்கிய பிறகு, அதனால் இந்திய ஆட்சிப் பகுதியின் தலைவராக கவர்னர் ஜெனரல் என்பவரும், ஒவ்வொரு பிராந்திய நிர்வாகத்துக்கும் ஒரு கவர்னரும் நியமிக்கப்பட்டார்கள். இங்கிலாந்து அரசின் சட்டங்கள் படியும், இந்தியாவுக்கென இயற்றப்பட்ட சட்டங்கள் படியும் நிர்வாகம் நடந்தது. இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக லண்டனில் பிரைவி கவுன்சலில் மேல்முறையீடு செய்யும் நடைமுறை இருந்தது. அத்தகைய சூழலில் இந்தியாவில் மக்களாட்சி, அதாவது இந்திய மக்களின் பிரதிநிதிகளே இந்திய மக்களை ஆள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபோது இரட்டையாட்சி முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்தியாவில் வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவர்கள் (சொத்துள்ளவர்கள், கல்வி கற்றவர்கள்) வாக்களித்து, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் ஆட்சி பிரிட்டிஷ் கவர்னர், கவர்னர் ஜெனரல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் நிகழும். கவர்னர்கள் நினைத்தால் இந்திய ஆட்சியாளர்களின் சட்டங்களை நிராகரிக்கலாம், ஏற்க மறுக்கலாம். மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பிரிட்டிஷ் மன்னர் நியமித்த ஆளுநரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுதான் இருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதும் ஒன்றிய அரசு, இந்திய உச்ச நீதிமன்றம் எல்லாம் முழு இறையாண்மையைப் பெற்றன. குடியரசுத் தலைவரையும் இந்திய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறை வந்தது. ஆனால், மாநிலங்களைப் பொறுத்தவரை ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவராகவே இருந்தார். பிரிவினைவாதம் தலைதூக்கி விடுமோ என்ற அச்சத்தில் வேண்டுமென்றேதான் மாநில ஆளுநரை ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும் என்ற ஏற்பாட்டினை செய்தார்கள். இது போன்ற அச்சங்கள்தான் உண்மையில் கூட்டாட்சி தத்துவத்துக்கு தீங்கிழப்பவை.
இந்த நியமன ஆளுநர் மாநில அரசின் செயல்பாடுகளில் குறுக்கிட முடியாது என்றாலும், அவர் மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தருவதில் இஷ்டப்படி காலம் தாழ்த்த அனுமதிப்பதாகவே அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. இது மாநில மக்களின் உரிமையை, இறையாண்மையை மறுதலிப்பதாகவே இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுக அரசை வடிவமைப்பதில் வெளிப்படையாக ஆளுநர் ஒன்றிய அரசின் கையாளாகவே செயல்பட்டது பட்டவர்த்தனமாக இருந்தது; மக்களாட்சி மரபுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

ADVERTISEMENT


**மாநிலமே ஆளுநரைத் தேர்வு செய்யட்டும்! **
மத்திய அரசுக்கு ஓர் அரசியலமைப்பு தலைவராக (Constitutional Head) குடியரசுத் தலைவர் இருப்பது போல, மாநில அரசுக்கும் ஓர் அரசியலமைப்பு தலைவர் தேவை என்றால் அவரை மாநிலமே தேர்ந்தெடுப்பதுதான் சரியான தீர்வு. மாநில மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்தால் அவருக்கும், முதல்வருக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். அதனால் சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தேர்தல் மன்றம் (Electoral College) ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட அமைப்பில் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியின் வாக்குக்கும் அவருடைய தொகுதியின் மக்கள்தொகையைப் பொறுத்து மதிப்பு அமையும். ஓர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரின் வாக்கைவிட, சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு பன்மடங்கு அதிக மதிப்பிருக்கும். அவ்வாறு ஒரு தேர்தல் மன்றத்தில் நிகழும் தேர்தலில் தேர்ந்தெடுத்தபின் வெற்றி பெற்ற வேட்பாளரை குடியரசுத் தலைவர் ஆளுநராக நியமனம் செய்யலாம், மத்திய உள்துறை அமைச்சகம் அவருடன் தொடர்பில் இருக்கலாம். ஆனால் அவர் மாநில மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருப்பார். ஒன்றிய அரசை ஆளும் கட்சியின் வயதான தலைவராகவோ, கையாளாகவோ இருக்க மாட்டார்.
மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளையும், பொருளாதார தற்சார்பையும், அந்தந்த மாநிலங்களின் திறனுக்கேற்ப, கொள்கைக்கேற்ப வளர்ச்சிப் பாதையை உருவாக்கிக் கொள்ளும் சாத்தியத்தையும் உருவாக்கினால்தான் இந்திய ஒன்றியம் ஒரு தேசமாக வலுவடைய முடியும். அதற்கு மாறாக தேச பக்தி, தேச நலன் என்ற பெயரில் ஒன்றிய அரசிடம் அதிகாரங்களைக் குவிப்பது, கல்வி, சுகாதாரம் என எல்லா துறைகளில் ஒரே நாடு, ஒரே கொள்கை என்று பேசுவதெல்லாம் ஒற்றுமைக்கோ, வளர்ச்சிக்கோ வழி வகுக்காது. இந்திய தேசம் உருவானபோது தலைவர்களுக்கு பலவிதமான அச்சங்கள் இருந்திருக்கலாம். ஆனால், இந்த எழுபதாண்டுகளின் அனுபவத்தில் இந்திய மாநிலங்கள் அடைந்துள்ள அரசியல் முதிர்ச்சியும், ஓர் ஒன்றியமாக இயங்குவதில் அவை கொண்டுள்ள நம்பிக்கையையும் கணக்கில்கொண்டு, அவற்றுக்குரிய சுயாட்சி உரிமைகளை அதிகரித்தால்தான் நல்லதொரு ஒன்றிய தேசமாக இந்தியா இருபத்தோராம் நூற்றாண்டில் திகழும்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

**ராஜன் குறை கிருஷ்ணன் **- பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

ADVERTISEMENT
Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share