வைஃபை ஆன் செய்ததும் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்து தொடர்பான யூட்யூப் லைவ் லிங்க் வந்து விழுந்தது.
அதை பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. ”ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆளுநர் வழக்கமாக ஏற்பாடு செய்யும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன.
ஆனால் இதில் திமுக மட்டும் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வந்தது. நேற்று இரவு வரை திமுக தரப்பில் இருந்து யாரும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற நிலை தான் இருந்தது. இந்த நிலையில் இன்று ஜனவரி 26 ஆம் தேதி காலை குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றினார். அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ’இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்துக்கு நீங்கள் வருகிறீர்கள்தானே… நீங்கள் வரவேண்டும்’ என்று ஆளுநர் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு முதலமைச்சர், ’ நான் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சி செல்ல வேண்டும் என்பதால் என்னால் வர இயலாது’ என்று தெரிவித்தவர், ஆளுநரின் வேண்டுகோளையும் ஏற்றார்.
ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ’ஆளுநரும் முதல்வரும் இணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆளுநரும் நேரில் வலியுறுத்தியதன் அடிப்படையில் தேநீர் விருந்தில் சில அமைச்சர்களை கலந்து கொள்ள வைக்கலாம் என்று முதலமைச்சர் திட்டமிட்டார்.

அதன்படி சென்னையில் எந்தெந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க… மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகிய மூன்று அமைச்சர்களும் சென்னையில் தான் இருந்தார்கள். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்காக இன்று காலை ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். சட்ட அமைச்சர் ரகுபதியும் சென்னையில் இருந்தார்.
இதை அடுத்து தான் இந்த ஐந்து அமைச்சர்களையும் ஆளுநர் மாளிகை சென்று தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆளுநருக்கு எதிராக கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடந்த இளைஞர் அணி மாநில மாநாட்டில் ஆளுநர் பதவியை அகற்றுவோம் என்று தீர்மானத்தை வாசித்து நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இன்று சென்னையில் தான் இருந்தார்.
ஆனால் அவர் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை இதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது இன்று மாலை இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அவர் ஆளுநர் மாளிகை செல்லவில்லை என்று கூறுகிறார்கள் திமுக தரப்பில்.
நிர்வாக ரீதியான இணக்க போக்கை வெளிப்படுத்தும் வகையில் தான் ஆளுநரின் அழைப்பின் பேரில் இந்தத் தேநீர் விருந்து அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் என்கிறார்கள் அரசுத் தரப்பில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
”நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது… ஆனால்” : அகிலேஷ் யாதவ்
