மாநில சட்டமன்ற மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கனிமொழி (திமுக):“உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மாநில சட்டமன்றம் மக்கள் இறையாண்மையின் தூணாகவும், ஜனநாயகத்தின் உயிர்துடிப்பாகவும் விளங்குகிறது. அந்த உயரிய அமைப்பு நிறைவேற்றிய மசோதாக்களை, எந்தவொரு காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரக் கொள்கைகளையும் வலுவாக உறுதிப்படுத்துகிறது.
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுத்தும் சட்டங்களையும் கொள்கைகளையும் தடுக்கும் வகையில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது என்பது அரசியலமைப்பின் ஆன்மாவின் நோக்கத்துக்கு முழுமையாக முரண்படுவதாகும் என்பதை இன்றைய தீர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தின் ஒவ்வொரு முடிவும் மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடே என்பதை இந்த தீர்ப்பு மறுபடியும் அனைவருக்கும் உணர்த்துகிறது.
இந்த தீர்ப்பு மாநிலங்களின் உரிமை, மக்கள் ஆட்சியின் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னோட்டமாகும். மாநில அரசின் செயல்பாடுகளை தாமதப்படுத்தும் அல்லது தடைசெய்யும் நோக்கத்துடன் ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளது. இது சட்டமன்றத்தின் மதிப்பையும், மக்களின் உணர்வுகளையும், மேன்மையையும் உயர்த்தும் நீதியின் முழக்கமாக திகழ்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் மனமார வரவேற்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் எந்தவிதத் தடையும் இன்றி சட்டபூர்வமான முறையில் முன்னேற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டுக்கு இன்று நீதிமன்றம் அளித்த உறுதிப்படுத்தல் மிகப் பெரும் பலமாகும். அரசியலமைப்பை மதிக்கும் பண்பும், கூட்டாட்சி மரபுகளைக் காக்கும் பொறுப்பும் அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.
தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் அதிகாரம் பாதிக்கப்படாமல், சட்டமன்றத்தின் கண்ணியம் குறையாமல், ஜனநாயகத்தின் மதிப்பு நிலைக்க தகுந்த பாதையை இந்த தீர்ப்பு உருவாக்கியுள்ளது. மக்கள் நலனே முதன்மையானது என்ற உண்மையான அரசியலமைப்பு வழங்கிய உறுதி மொழியில், நாங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம்.
மூத்த வழக்கறிஞர் அ.அருள்மொழி: இன்று 20.11.2025 அன்று ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் தலைமை நீதிபதி தலைமையில் ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு
மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது !!
தீர்ப்பை எழுதியவர் யார் என்று பெயர் குறிப்பிடாமல் தீர்ப்புகள் வரும் காலத்தில் இருக்கிறோம்!
இந்தத் தீர்ப்பும் அப்படியே!!
ஒன்றிய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்கிற நீதிபதிகள் பெயர் போடாமல் எழுதினால் அச்சம் என்று புரிந்து கொள்ளலாம்!
மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பட்டியல் சாதிகளுக்கும் எதிராகத் தீர்ப்பு எழுதுபவர்களுக்கு என்ன அச்சம்??
அவர்களுக்கே நான் தான் இந்தத் தீர்ப்பை எழுதினேன் என்று சொல்லிக் கொள்ள அசிங்கமாக இருக்கிறதா ?
கரு. நாகராஜன் (பாஜக): உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்திருக்கிறது.. மசோதா விவகாரங்களை அரசியல் ஆக்க நினைப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி. ஜனநாயகத்தை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க நினைத்த கட்சிகளுக்கு சரியான பதிலடி
