தமிழ்நாடு பெயர் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் அளித்துள்ள விளக்கம் பிரச்சினையிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள செய்யும் மழுப்பல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.
காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்று தமிழ்நாடு பெயர் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன்,
“தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற நான் பரிந்துரைக்கவில்லை என்று ஆளுநர் கூறுவது ஏற்புடையதல்ல.
அதை பரிந்துரைக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை. அப்படி பரிந்துரைத்தாலும் அதை யாரும் ஏற்கப் போவதில்லை. ஆளுநர் மனதில் இருப்பதைதான் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆளுநர் தவறுதலாக சொல்லிவிட்டார், அரசு கொடுத்த உரையில் சில பெயர்களையும், சில வார்த்தைகளையும் தவிர்த்துவிட்டு எதார்த்தமாக படித்தார் என்பது எதேச்சையாக நடந்தது அல்ல.
அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை வெளிப்படுத்துகிறார். அதில் தீவிரமாக இருக்கிறார். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினால் எந்த கேள்வியும் எழப் போவதில்லை.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது மாநிலங்களை ஏற்காத அமைப்பு. அதன் வரலாற்றை முழுமையாக படித்தவர்களால் அதை உணர முடியும். ஆர்.எஸ்.எஸ்.ன் கருத்துகளை தான் ஏதோ இயல்பாக சொல்வது போன்று அவர் தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருந்தார்.
தற்போது கடுமையான எதிர்ப்பு எழுந்ததின் காரணமாக விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு மட்டுமே ஆர்.என்.ரவி பதிலளித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரை குறித்து அவர் வாய் திறக்கவில்லை. மொத்தத்தில் ஆளுநர் செயல்பாடு என்பது ஆர்எஸ்எஸ்ன் கொள்கைகளை, லட்சியத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இருந்தது.
அவரது முயற்சி தமிழ்நாட்டில் தோல்வியடைந்துள்ளது. அதிமுக தவிர ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள், அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
எனவே இந்தப் பிரச்சினையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியாகவே அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.
கலை.ரா
ஜல்லிக்கட்டுக்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு!
அண்ணாமலை -தேஜஸ்வி விமான கதவு திறப்பு டேஞ்சர் : நடந்தது இதுதான்!
