சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (செப்டம்பர் 4) சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு முன்னாள் ஆளுநர் என்ற முறையில் சில கருத்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டோம்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. வெளிநாட்டில் போஸ் கொடுப்பதும், சைக்கிள் ஓட்டுவதும் தான் இருக்கிறதே தவிர, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு தமிழகத்தில் கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
ஓரளவிற்கு தமிழகத்திற்கு அந்நிய நாடுகளில் இருந்து முதலீடுகள் வருகிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் மோடி தான். முதலில் பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் அனைவரும் கேலி பேசினார்கள். ஒரு மாநிலத்திற்கே நீங்கள் இத்தனை முறை போக வேண்டிய நிலை ஏற்படும் போது, ஒரு நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க பிரதமர் மோடி எத்தனை முறை போக வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு 90 சதவிகிதம் நிதி கொடுத்துவிட்டது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தை இதற்கு முந்தைய தலைமை செயலர் தமிழகத்தில் நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம் என்றார். ஆனால், தற்போது நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்லும் போது மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்க முடியும்? அதனால் முற்றிலுமாக தவறு செய்தது திமுக அரசு தான்.
கார் ரேஸை அவ்வளவு சீக்கிரம் உங்களால் நடத்த முடிகிறது. ஆனால், ஒரு புதிய கட்சி துவங்கியுள்ள விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு அலைக்கழிப்பு செய்கிறீர்கள். மாநாடு நடத்த 21 கேள்விகளை கேட்கிறீர்கள்? அவர் என்ன பரீட்சையா எழுதப்போகிறார். இடம் ஒதுக்குவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள். அவர் கட்சியை தடுப்பது போல ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறீர்கள்.
விஜய்க்கு நாங்கள் ஆதரவாக செயல்படவில்லை. ஒரு புதிய கட்சி வரும்போது ஆதரிப்போம். அனைவரும் களத்தில் இருப்போம். யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எதிர்க்கட்சிகளை தமிழக அரசு முடக்க நினைக்கிறது. 2026 தேர்தலை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சிகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஃபேஸ்புக்கில் அசிங்கமாக எழுதுகிறார்கள். பெண் போலீஸ் அதிகாரியை முடியை பிடித்து இழுக்கிறார்கள். காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாதபோது, பின்னர் யாருக்கு தான் தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கப்போகிறது.
ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் யாரும் சட்டம் ஒழுங்கை கவனிக்கமாட்டார்களா? அமைச்சர்கள் எல்லோரும் பயத்தில் உதயநிதி புகழ் பாடுகிறார்கள். இந்த சமயம் பார்த்து துரைமுருகனும் வெளிநாடு சென்றிருக்கிறார். அதனால் உதயநிதி இதையெல்லாம் கொஞ்சம் கவனத்தில் கொண்டால் சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹெச்.ராஜா கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
போலி ஆவணத்துடன் வந்த மாணவர்… மருத்துவ கலந்தாய்வில் பரபரப்பு!

Comments are closed.