தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளதற்கு கேரளா காங்கிரஸ் சார்பில் இன்று (அக்டோபர் 19) கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டிடி தொலைக்காட்சி நிலையத்தில் ‘இந்தி மாதம்’ கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரே சிந்தனை ஒரே மொழி பேசினால் தானே உருவாகும்?
பின்னர் விழாவில் ஆளுநர் ரவி பேசுகையில், “இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்து மற்ற 27 மாநிலங்களிலும் அம்மாநில தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் அதனை புறக்கணிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் தொடர்பு கொள்வதை தமிழ்நாடு விரும்பவில்லை.
ஒரே சிந்தனை என்பது ஒரே மொழியில் பேசினால் தானே உருவாகும்? தமிழக இளைஞர்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா சென்றாலும் மொழி தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
கடந்த 50 வருடங்களாகத் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்துவதற்கான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இதற்காகத்தான் இந்திக்கு எதிரான போராட்டங்கள் பயன்படுத்தப்பட்டன” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்
ஆளுநர் ரவியின் இந்த பேச்சு தமிழக அரசியல் கட்சிகளையும், தமிழின உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதுதொடர்பாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரளா காங்கிரஸின் கேள்விகள்!
இந்த நிலையில் கேரளா காங்கிரஸ் சார்பில் ஆளுநரின் பேச்சுக்கு தற்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வட இந்திய மாநிலங்களில் கற்பிக்கப்படும் மூன்று மொழிகள் என்ன? பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, பெங்காலி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்பிக்கிறார்களா?
மற்ற மாநில மக்களுடன் பேச முடியாமல் தமிழர்கள் தவிக்கிறார்களா? நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?
தமிழக மக்கள் கேரளாவுக்கு வந்து எங்களுடன் தொடர்புகொள்வதில் எந்த சிரமமும் இல்லை. நாங்களும் அப்படித்தான். தமிழகம் சென்று தொடர்பு கொள்வதில் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழக மக்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இவ்வளவு காலம் தென்னிந்தியாவில் வேலை பார்த்தும் எத்தனை தென்னிந்திய மொழிகள் படிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டீர்கள்?” என்று அதிரடியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரம்யா பாண்டியனுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அவிட்டம் (18.10.2024 முதல் 15.11.2024 )