2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 9) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது.
ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் ஆட்சி, பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
ஏற்கனவே உரை தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டும் ஆளுநர் ரவி அரசின் உரையை முறையாக படிக்கவில்லை என்று முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
மேலும், சட்டப்பேரவை விதியின்படி அரசு தயாரித்து கொடுத்த ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
அதேபோல அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் தவிர்த்து, விடுத்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் ஒருமனதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், சட்டமன்றத்தில் முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர் ரவி சட்டமன்ற மரபை மீறி செயல்பட்டதாகவும், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக அவர் சென்றதால் தேசிய கீதத்தை அவமதித்ததாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மேலும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன.
இந்தநிலையில் தமிழக அரசு ஆளுநரை அவமரியாதை செய்ததாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் கூறும்போது,
“ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தமிழக சட்டமன்றத்தில் தமிழில் மேற்கோள் காட்டிய பாரதியார் மற்றும் அவ்வையார் வரிகள், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இது ஆளுநரை அவமதிக்கும் செயலாகும்.
கவர்னர் உரை ஜனவரி 6-ஆம் தேதி அச்சிடப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் உரையில் சில பகுதிகளை நீக்க கூறினார்.
ஆனால் தமிழக அரசு தரப்பில், ஆளுநர் உரை அச்சிற்கு சென்று விட்டது. ஆட்சேபத்திற்குரிய சில பகுதிகளை நீக்கிவிட்டு பேசுங்கள் என்று கூறினர்.
அதன்படியே கவர்னர் அந்த பகுதிகளை நீக்கி விட்டு பேசியுள்ளார். ஆளுநர் உரை முடிந்த பிறகு அவை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற சபை மரபை மீறி ஆளுநர் இருக்கும் போதே அவர் ஆற்றிய உரை அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று முதல்வர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இது அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய ஆளுநருக்கு அரசு கொடுக்கும் மரியாதை அல்ல. அவரை சட்டசபையில் அவமானப்படுத்தி உள்ளார்கள்.
திராவிட மாடல் ஆட்சி, தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத விஷயங்களை ஆளுநர் தனது உரையில் வாசிக்கவில்லை.
அரசின் கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ அவர் துதிபாடி பேச வேண்டிய தேவையில்லை.
குறிப்பாக, கோவை கார் குண்டு வெடிப்பில் தமிழக அரசு அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பதில் தாமதம் செய்தது என்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். அப்படி இருக்கும் போது தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது என்று அவர் எப்படி கூறுவார்?
ஜனவரி 12-ஆம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவு கூறும் இளைஞர் நாள். இதை ஆளுநர் உரையில் அவர் சேர்த்து கூறியது ஒன்றும் அவையை மீறிய செயல் அல்ல.
தமிழக அரசின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 232 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆளுநர் உரையில் இருந்தது.
மீனவர் பிரச்சனை என்பது சர்வதேச பிரச்சனை. இதில் மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழக அரசின் முயற்சியால் மட்டுமே மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டதை ஏற்காத ஆளுநர், மத்திய அரசின் உதவியுடன் மீனவர்கள் மீட்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.
தொழில் முதலீடு குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது. அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அந்நிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகம் முதலிடத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கால கட்டத்தில் தமிழகத்தில் 2.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஈர்க்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 28 பில்லியன் டாலர்கள் ஈர்க்கப்பட்டிருந்தது.
சட்டசபையில் ஆளுநர் தனது உரையை துவங்கும் போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை வெளியேற கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது சபாநாயகர் அவர்களை தடுக்காமல் அமைதியாக இருந்தார். இது ஆளுநரை சபாநாயகர் அவமதிக்கும் செயல்.
ஆளுநர் தனது ஆங்கில உரையை முடித்த பின்னர் சபாநாயகர் தமிழாக்க உரைக்கு பிறகு அவை ஒத்திவைக்கப்படுவது தான் மரபு. ஆனால் அவை நடவடிக்கையை மீறி ஆளுநர் இருக்கும் போதே அவரது உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை மரபை முற்றிலுமாக மீறிய செயலாகும்.” என்று ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
உயிரற்ற கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் எதற்கு: அஜித், விஜய்க்கு கடிதம்!
ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்; இல்லையேல் மாற்ற வேண்டும்- கமல்ஹாசன்
Comments are closed.