மாநில மொழி பாடத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
உதகையில் இன்று (ஜூன் 5) ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது,
“மனித சமுதாயம் முன்னேற்றமடைந்துள்ளது. மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப நமது கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில் உள்ளோம்.
இது விவசாயம், தொழில், உற்பத்தி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய உயர்கல்வி பாடத்திட்டங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளதா என்பதை உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த பின்பு காமராஜர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
அடுத்தடுத்து வந்த அரசுகள் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதனால் தமிழகத்தில் அதிகளவு மக்கள் கல்வி கற்றனர். அதற்கான பலனை நாம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தில் இந்தியாவை விட தமிழகம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் அடிப்படை கல்விக்கான தேவை இன்று அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக தான் பட்டப்படிப்பு முடித்த நமது மாணவர்களுக்கு போதுமான அளவு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் குறைந்த சம்பளத்தில் ஊதியம் பெற்று வருகிறார்கள். இது நம்முடைய உற்பத்தி திறனை குறைக்கிறது.
இதனை சரி செய்ய காலத்திற்கேற்றாற் போல அவர்களுக்கு நாம் கல்வி வழங்க வேண்டும். இது தான் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சமாகும். இது மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தான் பொறுப்பானவர்கள்
நம்முடைய பள்ளி, கல்வி மாணவர்கள் பலருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதில் பிரச்சனை உள்ளது. ஆங்கிலம் என்பது வெளிநாட்டு மொழி. தமிழில் மாணவர்கள் சிறப்பாக பேசுகிறார்கள். தாய் மொழியில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தால் தான் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும். மாநில மொழி பாடத்திட்டங்களில் பல குறைபாடுகள் உள்ளது. தமிழ் மொழியில் குறிப்பிடத்தகுந்த அளவில் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடப்புத்தகங்களை உருவாக்க பல்கலைக்கழகங்கள் முயற்சி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்