ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இன்று (ஏப்ரல் 22) தெரிவிக்கப்பட்டுள்ளது. Governor Ravi invites Vice Chancellor
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் உதகை ராஜ்பவனில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு ஏப்ரல் 25 அன்று மாநாட்டைத் தொடங்கி வைப்பார். தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
பல்கலைக் கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்பு, கற்றல் விளைவுகளை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து 10 மசோதாக்களும் உடனடியாக அமலுக்கு வந்தது. துணை வேந்தர்களை அரசே நியமிக்கலாம் என்ற சட்டத் திருத்த மசோதாவும் இதில் அடங்கும். இதனையடுத்து கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தசூழலில், ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை, ஆளுநர் ரவி ஏப்ரல் 19-ஆம் தேதி டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி ஜெகதீப் தன்கருக்கு அழைப்பு விடுத்தார்.
துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Governor Ravi invites Vice Chancellor
