சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் : டெலிட் செய்து மீண்டும் போடப்பட்ட ட்விட்!

Published On:

| By christopher

கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தான் வலியுறுத்தியும் தேசிய கீதம் பாடப்படாததால் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி பேரவையை விட்டு வெளியேறிய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக தலைமை செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை சட்டமன்றத்திற்குள் அழைத்துச் சென்றார்.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் தேசிய கீதம் பாட அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தனது உரையை வாசிக்காமல் உடனடியாக அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

எனினும் சரியாக 9.43 மணிக்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது ஜனாதிபதி உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று சட்டப்பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக சபாநாயகர், முதலமைச்சருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டு, 10.03 மணிக்கு மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், ’தேசிய கீதமானது ஜனாதிபதி உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது’ என முந்தைய விளக்கத்தில் இருந்த இந்த வாக்கியம் மட்டும் நீக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டின் கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய போதும் ஆளுநர் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் பாடப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ’தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்துக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிவின்போது தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது’ என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தேசிய கீதம் சர்ச்சை : கடந்த ஆண்டே ஆளுநருக்கு விளக்கமளித்த அப்பாவு

தேசிய கீதம் அவமதிப்பு? : உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share