’காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?’ தமிழக அரசுக்கு ஆளுநர் கேள்வி!

Published On:

| By christopher

Governor questions tn govt

காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா? என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினத்தையொட்டி இன்று (ஜனவரி 30) நாடு முழுவதும் அவரது திருவுருவ படத்துக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.

இதனையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

அதே போன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில் முன்வைத்துள்ளார்.

அவர், “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956-ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும்.

காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?

தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன

காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என்று ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share