ஆளுநர் விவகாரத்தில் தமிழக முதல்வர் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனிதீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் இருந்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் உரிய காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதேபோல் தங்கள் மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு முழுஆதரவு அளிப்போம். ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம். அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் கூட்டாட்சி கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிப்போம்” என பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.
மேலும் அவர், “தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துக்கள் கேரளாவில் நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒத்து போகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.
கேரளாவிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் தேவையில்லாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன, ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம்” என்றும் கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்,”எனது கடிதத்திற்கு முழு ஆதரவு அளித்ததற்கு நன்றி. மாநில சுயாட்சியை அழிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக ஒருஅரணாக தமிழ்நாடும் கேரளாவும் நிற்கின்றன.
ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான நமது அறப்போராட்டத்திலும் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு விழாவில் இசைப்புயல்!