பருவமழை ஏற்பாடுகள்… தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

Published On:

| By Selvam

பருவமழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 15) பாராட்டியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சேலம் மேச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ரவி, “பருவமழைக்காக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையை சமாளிக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. மழையில் இருந்து நாம் மீண்டு வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆய்வு!

சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கும் பச்சப்பட்டி, ஆறுமுக நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பருவமழையை எதிர்கொள்ள இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், அதி கனமழை காரணமாக குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சேலம் மாவட்டம் முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

கோவையில் செந்தில் பாலாஜி ஆய்வு!

கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கதிரவன் கார்டன் பகுதியில் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது மழைநீர் புகும் இடங்களில் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை நிவாரண முகாம்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் கொட்டும் கனமழை… முதல் நாளே முடியல… புலம்பும் மக்கள்!

பூச்செடிகளுக்குள் துடிதுடித்த உயிர்: சேலம் அக்கா தம்பி கொலை – நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share