விலை வீழ்ச்சி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது பேசிய சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “தஞ்சை மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்துக்கும் இடையே ரூ.400 கோடி மதிப்பில் கட்ட இருந்த உயர்மட்ட பால கதவணை திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது தவறான முடிவு. அரசு தனது முடிவை மாற்றி கொண்டு திட்டமிட்டப்படி கொள்ளிடத்தில் புதிய கதவணையை கட்டி நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும்” என்றார்.
அடுத்து, தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் பேசியபோது, “குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பிற்பகுதியில் அரவைக்காக கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை. இந்தத் தொகையை விரைவில் வழங்க வேண்டும்” என்றார்
இதற்கு பதில் அளித்த ஆட்சியர், “இந்த ஆலையில் விவசாயிகள் வழங்கிய கரும்பில் சர்க்கரை கட்டுமானம் 9.22 சதவிகிதத்தை எட்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை படைத்த விவசாயிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
அதற்கடுத்து பேசிய தஞ்சையைச் சேர்ந்த செந்தில்குமார், “தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எங்கெல்லாம் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற விவரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் மட்டுமே உள்ளது. தற்போது தேங்காய் விலை மிகவும் சரிந்து வருகிறது. அதாவது கடந்த ஆண்டு ரூ.22-க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது ரூ.8-க்கு கூட விற்க முடியவில்லை. விலைவீழ்ச்சி காரணமாக எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், “இதுகுறித்து கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
**-ராஜ்**
