சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ் ஆப் வாயிலாக வழங்கப்படும் செயல்பாட்டினை மேயர் பிரியா இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மக்களுக்கான சேவைகள் வாட்ஸ் அப் மூலம் வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 25) ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
இந்த சேவையை பெறுவது எப்படி?

முதலில் 94450 61913 என்கிற Whats App எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து இந்த Whats App Chatbot எண்ணிற்கு ‘வணக்கம்’ என அனுப்ப வேண்டும்.
அதன்பிறகு, பிரதான சேவை, அனைத்து சேவைகள், 1913 அழைக்க என 3 விருப்பங்கள் அனுப்பப்படும்.
அதில், பிரதான சேவையை தேர்வு செய்தால், பிறப்புச் சான்றிதல், இறப்புச் சான்றிதழ், சொத்து வரி செலுத்துதல், சொத்து வரி சேவைகள பெறுதல் ஆகிய ஆப்ஷன்கள் லிங்க்குகள் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.
அதில் நமது மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் .
தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாயக் கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கடை வாடகை செலுத்துதல், கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி தாங்கள் இருந்த இடத்தில் இருந்து இந்த Whats App Chatbot வாயிலாகப் பெற்றிட முடியும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அடுத்ததாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB) மற்றும் பதிவுத் துறை (TNREGIET) ஆகியவற்றின் சேவைகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
