மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளியின் அவலநிலை!

By Minnambalam

|

Published on 11 Jul 2022, 1:52 PM

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளியில் போதிய கட்டடங்கள் இல்லாததால், சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மாணவ – மாணவிகள் படிக்கும் சூழலில் இருக்கிறார்கள். சரியான கழிப்பறை வசதிகள்கூட இல்லாமல் மாணவிகள் தவிக்கின்றனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா பரணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1984ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர், 2021ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ‌பிலாக்குறிச்சி, வீராகண், பரணம், நாகல் குழி, இரும்பிலிகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பள்ளியில் 469 மாணவர்கள், 306 மாணவிகள் என மொத்தம் 775 பேர் படித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தப் பள்ளியானது தரம் உயர்த்தப்பட்டாலும் போதிய கட்டட வசதிகள் உருவாக்கப்படாததால் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் ஆய்வகங்களிலும் மாணவ – மாணவிகளைப் படிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் ஒரே வகுப்பறையில் அதிக அளவு மாணவர்களை அமர்ந்து படிக்க வைக்க வேண்டிய நிலையில் பள்ளிக்கூடம் உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சமூக ஆர்வலர்கள், “இந்தப் பள்ளியில் படித்த பல பேர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தது இந்தப் பள்ளி. இப்படிப்பட்ட பல சிறப்புகள் இருந்தும் இந்தப் பள்ளியை தரம் உயர்த்துவது குறித்து எந்த அதிகாரிகளும் முனைப்புக் காட்டவில்லை. பதினொன்றாம் வகுப்பில் 97 மாணவ – மாணவிகளும், பன்னிரண்டாம் வகுப்பில் 120 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சுமார் 306 மாணவிகள் படித்து வரும் இந்தப் பள்ளியில் மாணவிகளுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தப் பள்ளியில் தமிழ், அறிவியல் பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களும், பொருளியல், வணிகவியல் பாடங்களில் முதுகலை ஆசிரியர் இடங்களும் காலியாக உள்ளன.

எனவே தமிழக அரசானது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாகக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் கட்டடங்களைக் கட்டி மாணவர்களின் கனவுகளை நினைவாக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது” என்கின்றனர்.

ADVERTISEMENT

-ராஜ்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel