கடையநல்லூர் அருகே நேற்று முன்தினம் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த மல்லிகா என்ற பெண்ணின் மாற்றுத்திறனாளி மகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் புளியங்குடி முத்துராமன் என்பரது மனைவி மல்லிகாவும் உயிரிழந்தார். அவரது உடல் தென்காசி தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக புளியங்குடி கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த மல்லிகாவிற்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று பேர் உள்ளனர். பெண் பிள்ளைகளில் ஒருவருக்கு இரண்டு பார்வையும் கிடையாது. தனது சுயநினைவு இல்லாத 85 வயது பெற்ற தாயையும் தன்னுடன் வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
மல்லிகாவின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் பீடி சுற்றி குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். இதில் மல்லிகாவின் மகள் கீர்த்திகா பார்வை மாற்று திறனாளி. இவர் மல்லிகாவின் தாயின் இறுதி சடங்கின் போது கதறி அழுதார்.
என் அண்ணனுக்கும் எனது சகோதரிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. எனக்கு கண் பார்வை இல்லாததால் இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் எம்.ஏ, பி.எட் படித்துள்ளேன். எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளேன். இரண்டு முறை டெட் எக்ஸாமில் தேர்வாகியுள்ளேன். கணிப்பொறி தட்டச்சு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தகப்பன் இல்லாத என்னை என் தாய் நன்றாகப் படிக்க வைத்தார்கள் இப்போது என் தாய் இல்லாததால் எனது வாழ்வே இருண்டு போய்விட்டது. எனக்கென்று யார் இருக்கிறார்கள்? என கூறி கதறி அழுதார். மேலும் முதல்வர் எனக்கு அரசு வேலை வழங்கி என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து தமிழக முதல்வர் தற்போது கீர்த்திகாவிடம் தொலைபேசியில் பேசியதை அடுத்து புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியின் நியமன ஆணையை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று மதியம் அவரது இல்லத்திற்கே சென்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
