மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று (அக்டோபர் 19) உடல்நலக் குறைவால் காலமானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கோபால் மற்றும் மீனாம்பிகை தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பங்காரு அடிகளார். 1941ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு வயது 82.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவராக செயல்பட்டு வந்த இவரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்
கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது.
அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து செவ்வாடை உடுத்தி சாமானிய பெண்களுக்கும் இறைவழிபாடு நம்பிக்கை ஊட்டி கரு சுமக்கும் பெண்களை கருவறை வரை சென்று தானே பூஜித்து வலம் வந்து எப்போதும் வழிபட வழிகண்ட ஆன்மீக தமிழ்மகனுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவரது ஆன்மீக சேவைக்கும்,கல்விச் சேவைக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
பங்காரு அடிகளாரின் இழப்பு ஆன்மீக உலகிற்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,சித்தர் பீடம் சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சக்தி அன்னையை பிராத்திக்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் பங்காரு அடிகளார் தகர்த்தார்.
பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு.
பங்காரு அடிகளார் அவர்களின் கல்விப் பணியும் பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியில் தொடங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை & அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட அனைத்து புலங்களிலும் பட்டம் வழங்கும் கல்லூரிகள் வரை தரமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவை வழங்குதல், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க பொது மற்றும் பல் மருத்துவமனைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் என அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வாயிலாக அருள்திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மேற்கொண்ட பணிகள்அனைத்தும் பாராட்டத்தக்கவை.
பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீகத்துக்கு பெரும் இழப்பு” என்று கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் அவர்கள் மீதும் – கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தேசிய தலைவர் நட்டா
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.
அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத ஈடுபாடும் என்றென்றும் நினைவுகூரப்படும். துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடைந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
பங்காரு அடிகளாரின் மரணம் லட்சக்கணக்கான மக்களுக்கு பேரிழப்பு.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பிரியா
டபுள் டமாக்கா…. வாட்ஸ்ஆப்-ன் அசத்தல் அறிவிப்பு!
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு சவாலா விஜய்? திமுக நடத்திய திடீர் சர்வே!