இனி எங்கள் கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்கிறோம் என்று சொல்லும் பேச்சுக்கே இடமில்லை, தீர்வு மட்டுமே வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர். Government employees warned
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, ஃபோட்டோ ஜியோ அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அடுத்து வரும் நாட்களில் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மின்னம்பலத்திடம் கூறுகையில், “அரசு ஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு 2026ல் வழங்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலை. இந்த ஏப்ரல் மாதமே சரண்டர் விடுப்பை வழங்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். அதைவிட முக்கியமாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் எங்கள் போராட்டங்களை, கோரிக்கைகளை அரசு செவிக்கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தி, பரிசீலனை செய்கிறோம் என்கிறார்கள். ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படுவதில்லை. அப்போதைக்கு எங்களை சமாதனப்படுத்தி அனுப்புகிறார்கள். அதனால் இனி பரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. தீர்வு மட்டுமே வேண்டும். அதற்கான போராட்டங்களை அரசு ஊழியர்களான நாங்கள் தீவிரப்படுத்தி வருகிறோம்.
எங்கள் போராட்டங்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினரை ஆதரவையும் கோர இருக்கிறோம். அகில இந்திய அரசு ஊழியர்கள் சங்கமும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்” என்றார்.
வரும் 22ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட தலைநகரங்களில் பேரணியும், அடுத்த மாதம் 24ஆம் தேதி ஆயத்த மாநாடு போராட்டமும், 30ஆம் தேதி ஒருநாள் அடையாள விடுப்பு போராட்டமும், அதைத்தொடர்ந்து சில போராட்டங்களையும் நடத்த முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Government employees warned