அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்… புயலாக புறப்படும் அரசு ஊழியர்கள்!

Published On:

| By vanangamudi

அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். Government Employees warned Stalin

ஈரோடு, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச் 8) காலை 11.30 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் 60 பேர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி தனது உரையை தொடங்கும் போது கவிஞர் மு.மேத்தாவின், “உறங்கிக் கொண்டிருக்கும் போர் வாளைக் காட்டிலும், ஊர்ந்து கொண்டிருக்கும் புழு கூட உயர்ந்தது தான், காத்திருக்கும் வரை நம் பெயர் காற்றென்றே இருக்கட்டும், புறப்பட்டு விட்டால் புயலென்று புரிய வைப்போம்” என்ற கவிதை வரிகளை குறிப்பிட்டு தனது பேச்சை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “தமிழக அரசு தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வாக்குறுதி கொடுத்தது.

ADVERTISEMENT

ஆனால் நான்காண்டு கால ஆட்சியை நிறைவு செய்த பிறகு இன்று மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அலுவலர் குழு அமைத்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு அலுவலர் குழுவை உடனே திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அதே போல் மார்ச் 14-ல் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், கடந்த 25.02.2025 அன்று 1.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

2,700-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன. போராட்டத்திற்கு முன்னதாக அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. போராட்டத்தை அறிவித்த எங்களுக்கு அழைப்பு இல்லை.

அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நடைபெற்ற இப்போராட்டத்தைப் பற்றிய செய்திகளை திசை திருப்பும் வகையில் முதல்வர் பேசுவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு மூத்த அமைச்சரை வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை அறிவிப்பார் எனத் தெரிவிக்கிறார். மற்றமொரு அமைச்சர் இந்த நேரத்தில் போராடினால் எதிர்கட்சிகள் சட்டசபையில் பிரச்சனைகளைக் கிளப்புவார்கள். எனவே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து முடித்ததற்குப் பிறகு போராட்டம் நடத்துங்கள் எனத் தெரிவிக்கிறார்.

இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் முழுமையான கடைசி நிதிநிலை அறிக்கை இது தான். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எப்போதுமில்லை என்ற நிலையில் தொடர் போராட்டங்களைத் திட்டமிட்டுள்ளோம். எங்களைப் பொறுத்தளவில் நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிற உரிமைகளும், சலுகைகளும் நாங்கள் போராடிப் பெற்றவைகளே.

அந்த அடிப்படையில் கீழ்காணும் இயக்கங்களைத் திட்டமிட்டுள்ளோம். எங்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை இந்த சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காமல் எங்களை தமிழக அரசு ஏமாற்ற நினைத்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அரசு ஊழியர், ஆசிரியர்களின் புதிய காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும் போது ஊழியர்களின் விருப்புரிமை கேட்க வலியுறுத்தி 12.03.2025 (புதன்) மாவட்டக் கருவூலம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக 13.03.2025 (வியாழன்) அன்று மாவட்டத் தலைநகரில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் நமது அமைப்பைச் சேர்ந்த மாநில, மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பது எனமுடிவெடுக்கப்பட்டது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு வாழ்வூதியம் கோரி 19.03.20205 (புதன்) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அமைப்பை பலப்படுத்தும் விதமாக ஏப்ரல்- 5,6 தேதிகளில் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பினை விருதுநகரில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

17.04.20205(வியாழன்) வாழ்வூதியம் கோரும் மாவட்டத் தலைநகரில் பேரணியை சக்தியாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

24.04.2025 (வியாழன்) காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும் திட்டத்தை புதுப்பிக்கும் போது ஊழியர்களின் விருப்புரிமை கேட்க வலியுறுத்தி சென்னை கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார். Government Employees warned Stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share