திட்டமிட்டப்படி போராட்டம் : அரசு ஊழியர்கள் சங்கம் திட்டவட்டம்!

Published On:

| By Kavi

நாளை திட்டமிட்டப்படி எங்களது போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. Government Employees Union

அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார்.

ADVERTISEMENT

இந்த குழு இன்று (பிப்ரவரி 24) அரசு ஊழியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, திட்டமிட்டப்படி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச்செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதில், “தமிழக அரசால் அமைக்கப்பட்ட இந்த அமைச்சர்கள் குழு வெறும் கண்துடைப்பே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று தேர்தல் காலத்தில் தெரிவித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டு காலத்தில் தேர்தல் கால வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில், எங்களது அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்ட போது இதே போன்றதொரு அமைச்சர் குழுவால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அமைச்சர்களின் பேச்சை நம்பி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். விளைவு இன்று வரை எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

ADVERTISEMENT

மாறாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்த விட்டு, எல்லாவற்றுக்கும் ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக அலுவலர் குழுவை அமைத்து ஒன்றிய அரசின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வேலையைச் செய்திருப்பது சந்தர்ப்பவாத செயலாகவும், துரோகச் செயலாகவுமே நாங்கள் பார்க்கிறோம்.

இந்த நிலையில் நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி 25.02.2025 (செவ்வாய்) அன்று ஒட்டு மொத்தத் தற்செயல் விடுப்பு போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளோம்.

போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள எங்களது அமைப்பிற்கு இது வரை பேச்சு வார்த்தைக்கு முறையாக அரசுத் தரப்பிலிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
முறையாள அழைப்பு வரத்தால் எங்கள் சங்கம் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை

பேச்சு வார்த்தை என்ற பெயரில் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் வேலையையே திராவிட மாடல் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

புதிய ஓய்வூதியம் தொடர்பாக அலுவலர் குழுவை நாங்கள் ஏற்க மாட்டோம்,

பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த அரசு கொள்கை முடிவாக எழுத்துப்பூர்வமாக வெளியிட்டு தற்போது நடைபெற உள்ள சட்டமன்றக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறோம்.

20- அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காத நிலையில் எங்களது தற்செயல் விடுப்பு போராட்டம் நிச்சமாக நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து 08.03.2025 (சனிக்கிழமை) ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில செயற்குழுவில் தொடர் போராட்டங்களை முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Government Employees Union

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share