சட்டமன்ற கூட்டத்தொடர்.. அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்!

Published On:

| By vanangamudi

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் 14-ஆம் தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாள் மார்ச் 13-ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. Government Employees union protest

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம், ஆண்டுக்கு 15 நாட்கள் விடுப்பு சரண்டர் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம். பணி கொடை வழங்குவது போன்ற பல வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியாக அளித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தநிலையில், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் எதையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று கூறி, பிப்ரவரி 25 ஆம் தேதி அனைத்து சங்கம் தரப்பிலும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். 

இதனையடுத்து அரசு ஊழியர்கள் சங்க உறுப்பினர்களுடன், பிப்ரவரி 24-ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், நான்கு வாரங்கள் போராட்டத்தை கைவிட அரசு ஊழியர்களை வலியுறுத்தினர்.

இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டப்படி பிப்ரவரி 25 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தநிலையில், சட்டமன்ற கூட்டத்தொடக்கு முன்பாக போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் சங்கம் ஆலோசனை செய்து வருவதாக பிப்ரவரி 27-ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை… அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு என்ற தலைப்பில் மின்னம்பத்தில் செய்தி வெளியிட்டிந்தோம். இந்தநிலையில், மார்ச் 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர் அரசு ஊழியர் சங்கத்தினர்.

இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“திமுக ஆட்சியானது அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதற்காக 2016-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஓர் குழு அமைத்தார்கள்.

அவருக்கு பிறகு ஓய்வுபெற்ற ஸ்ரீதர் ஐஏஎஸ் ஆய்வு செய்தார். அவர் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் வெளியிடவில்லை.

தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அலுவலர் குழு அமைத்திருக்கிறார்கள். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று காலதாமதம் செய்வதற்காகவே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை கலைக்க வேண்டும் என்பது தான் முக்கியமான கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார். Government Employees union protest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share