அரசு பேருந்துகள் கட்டணம் உயரப்போவதாக சமீப நாட்களாக தகவல்கள் பரவிய நிலையில், இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். Government bus fare hike
ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும். அதைத்தொடர்ந்து உயர்மட்ட குழு அமைத்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ தங்கள் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்தசூழலில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக இன்று (ஜூன் 3) அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நீதிமன்றம் வழங்கிய அறிவுரையின் பேரில் தான் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைப்பெற்ற கூட்டம். தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டமில்லை.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு என்பது இல்லை. இதில், தெளிவாக இருக்கிறோம். பொதுமக்கள் மீது கட்டண உயர்வு சுமையை ஏற்றக்கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போதும் கூட, தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.
எதிர்க்கட்சியினர் மின்சார கட்டண உயரப்போகிறது என தொடர்ச்சியாக பேசி வந்தனர். முதலமைச்சர் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
அதுபோன்று அரசு போக்குவரத்து பேருந்துகளிலும் கட்டண உயர்வு
இருக்காது என்பதை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.Government bus fare hike
