ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்துக்கு தடை: மீறினால் அபராதம்!

Published On:

| By Prakash

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் இன்று (அக்டோபர் 3) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைனில் ரம்மி விளையாடி வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழப்பதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இதுதொடர்ந்து வாடிக்கையாகி வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசர தடைச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து , தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு ,

அக்குழு தனது அறிக்கையினை கடந்த ஜூன் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.

இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்த தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருந்தது.

government bans ads promoting online betting citing

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக சமக தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கடந்த செப்டம்பர் 4ம் தேதி திருச்சியில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,

“ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் விளம்பரத்தை கட்டுபடுத்துவது அரசுதான். எனவே, அரசு முடிவு எடுத்து ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட ஒன்று எனச் சொன்னால், தடை செய்ததை நான் எப்படி பயன்படுத்துவேன்?

தடை செய்த ஒன்றுக்கு நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். நீங்கள் (அரசு) தடையே செய்யவில்லையே. நீங்கள் தடை செய்யுங்கள்,

அது தானாக நிறுத்தப்படும். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்கிறார் என்று எப்படி சொல்வீர்கள்?” எனக் கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என செய்தி இணையதளங்கள் ,

ஓடிடி இயங்குதளங்கள் மற்றும் தனியார் செயற்கைக்கோள் சேனல்களுக்கு மத்திய அரசு இன்று (அக்டோபர் 3) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தனியார் செயற்கைக்கோள் சேனல்கள், அதன் செய்தி இணையதளங்கள் ஆகியன ஆன்லைன் சூதாட்ட தளங்கள் பற்றிய விளம்பரங்களை வெளியிட வேண்டாம்.

அறிவுறுத்தலை மீறும் தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கு சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும்,

அதனை ஒளிபரப்புவது சட்ட விரோதமானது எனவும் கடந்த ஜூன் மாதம் 13 ம் தேதி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இன்று எச்சரித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழக அரசு புதிய அறிவிப்பு!

போராட்டம் தொடரும்: கோவை தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share