அரசாட்சியும், தேர்தலும்: விரைந்து சிதையும் மக்களாட்சி விழுமியங்கள்

Published On:

| By Minnambalam

democratic values are rapidly decaying

ராஜன் குறை

மக்களாட்சியின் உயிர் என்பது பொதுமன்றத்தில் நிகழும் உரையாடல்கள், மக்களின் கருத்துகளை ஆள்பவர்கள் கவனிப்பது, உணர்வது, கணக்கில் கொள்வது ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் இதை பொதுமன்ற சிந்தனை அல்லது அறிவு (Public Reason) என்பார்கள். உரையாடல்கள் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில், ஊடகங்களில், மக்கள் மன்றங்களில் என பல்வேறு தளங்களிலும் நிகழ வேண்டும். பொது மன்றத்தில் உருவாகும் கருத்துகள், ஐயங்கள், அச்சங்கள் ஆகியவற்றை அரசாங்கம் கவனமாக கருத்தில்கொள்ள வேண்டும். அதுதான் மக்களாட்சியின் விழுமியம்.

ஒரு குடியரசின் இரு பெரும் தூண்களில் ஒன்று மக்களாட்சி என்றால், மற்றொன்று சட்டத்தின் ஆட்சி. மக்களாட்சி என்பது வெறும் பெரும்பான்மைவாதமாக மாறாமல், விழுமியங்கள் சார்ந்து நடப்பதை உறுதி செய்வதுதான் சட்டத்தின் ஆட்சி. பொதுமன்றத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், உரையாடல்களில் தீராத முரண்கள் ஆகியவற்றை நீதிமன்றம் தீர்த்து வைக்கலாம்.

மக்கள் பிரதிநிதிகளில் ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறார்கள். அந்தப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று நினைத்தால் அது பெரும்பான்மைவாதம். நாடாளுமன்ற, சட்டமன்றப் பெரும்பான்மையின் அடிப்படையில் அமையும் அரசு, தொடர்ந்து அந்த அவைகளிலும், அவைகளுக்கு வெளியே பொதுமன்றத்திலும் உரையாடல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். தனது நடவடிக்கைகளை விளக்க வேண்டும்; மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும்.

அனைவரது ஒப்புதலும் கிடைக்காதபோது சில முடிவுகளை ஒத்திப்போட வேண்டும். தொடர்ந்து விவாதிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகளை எத்தனை பேர் கூறுகிறார்கள் என்பதைக் கருதாமல், அந்தக் கருத்துகளில் வலு உள்ளதா என்பதையே பரிசீலிக்க வேண்டும்.

சுருங்கச்சொன்னால் சட்டப்படியும் நடக்க வேண்டும், நியாய தர்மங்களையும் அனுசரிக்க வேண்டும், தொடர்ந்து பொதுமன்றத்தில் கருத்தொப்புமையையும் உருவாக்க வேண்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக விழுமியங்களை பேண வேண்டும். ஆனால், எல்லா விழுமியங்களும் கடும் சிதைவுகளை சந்திப்பதைக் காண்கிறோம். சென்ற வார நிகழ்ச்சிகள், விழுமியங்களின் சிதைவுகள் சிலவற்றைக் காண்போம்.

விழுமியங்களின் சிதைவு 1: பிரதமர் தேர்தல் விதிகளுக்கு அப்பாற்பட்டவரா?


தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமானது, மக்களைப் பிளவுபடுத்தும்படி பேசக் கூடாது, குறிப்பாக மத அடையாள வெறுப்பரசியல் அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது என்பதாகும். ஆனால், பிரதமர் வெளிப்படையாக முஸ்லிம் சமூகத்தினரை ஊடுருவியவர்கள், அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் என்று பொருள் தரும்படி பேசினார். காங்கிரஸ் இந்துக்களின் உடமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு தரப் பார்க்கிறது என்று தரக்குறைவாக, அபாண்டமாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து ஆயிரக்கணக்கான புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்தன. ஊடகங்களில், பொதுமன்றத்தில் பிரதமர் பேசியதில் உள்ள பிழைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன, பல்வேறு தரப்பினரால் நிறுவப்பட்டன. தேர்தல் ஆணையம் இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் முற்றிலும் புதியதொரு வழிமுறையைப் பின்பற்றியது. பிரதமரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு அவர் சார்ந்த பாரதீய ஜனதா கட்சி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்பதால் கட்சிதான் விளக்கம் தர வேண்டும் என்று கூறுகிறது. இது கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

பிரதமராக இருந்தாலும், அவரும் ஒரு வேட்பாளர், கட்சியின் பேச்சாளர்தான் என்னும்போது அவரிடமே விளக்கம் கேட்பதுதானே சரியானது? இதுவரை புகார் அளிக்கப்பட்டபோதெல்லாம் தொடர்புடைய பேச்சாளர்களிடம்தானே விளக்கம் கேட்கப்பட்டுள்ளது? பலரும் பிரதமரிடம் விளக்கம் கேட்க தேர்தல் ஆணையம் அஞ்சுகிறதா என்று வியக்கிறார்கள். இது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக கூறுகிறார்கள்.

பிரதமர் இந்தக் கண்டனங்களைக் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து முஸ்லிம் வெறுப்பினை வெளிப்படுத்தும் விதமாகப் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் முஸ்லிம்களை ஆதரிப்பதாகவும், இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும் கூறுகிறார். மத அடையாள பிளவுவாத அரசியலை முன்னெடுப்பது மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரானது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. ஆனாலும், தேர்தல் ஆணையம் தலையிட மறுக்கிறது.

democratic values are rapidly decaying

விழுமியங்கள் சிதைவு 2: சூரத்தில் போட்டியின்றி தேர்வான பாஜக வேட்பாளர்.

குஜராத்தின் சூரத் நகரில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அங்கே பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக மாவட்டத் தேர்தல் அதிகாரியால் ஏப்ரல் 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளார். இது எப்படி நடந்தது என்பதுதான் பிரச்சினை.

காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி என்பவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம், அவரை முன்மொழிந்து கையெழுத்து இட்டவர்கள் அது தங்கள் கையெழுத்து இல்லை என்று அஃபிடவிட் தாக்கல் செய்ததுதான். அது மட்டுமல்லாமல் அவருக்கு மாற்று வேட்பாளராக காங்கிரஸ் தரப்பில் மனு செய்திருந்த சுரேஷ் பாடசாலா என்பவரது வேட்பு மனுவும் இதே காரணங்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இவர்கள் இருவரைத் தவிர வேட்பு மனு செய்த எட்டு பேர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட, தங்கள் வேட்புமனுவைத் திடீரென திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.

இதனால் போட்டியாளர்கள் யாரும் களத்தில் இல்லாததால் பாஜக வேட்பாளர் தேர்தல் நடக்காமலேயே தேர்வானதாக அறிவிக்கப்பட்டு விட்டார். இதற்கு முன் 1951ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில்தான் நாடு முழுவதுமிருந்து பத்து பேர் போட்டியின்றி தேர்வானதாகத் தெரிகிறது. அதற்குப் பின் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. இன்றைய நிலையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர்கூட ஆளும் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட முன்வரவில்லை, எட்டு பேர் வேட்புமனுவை திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டார்கள் என்பது பல்வேறு ஐயங்களுக்கு இடமளிக்கிறது.

இந்தப் பிரச்சினையில் இரண்டு முக்கியமான சட்டச் சிக்கல்கள் இருப்பதாக புகழ்பெற்ற வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். ஒன்று, மாவட்ட தேர்தல் அதிகாரி கையெழுத்து போலியானதா, இல்லையா என்பதை சரிபார்க்க அதிகாரம் படைத்தவர் அல்ல என்று கூறுகிறார். அதாவது கையெழுத்து போட்டவரின் அடையாளம் சரியானதா என்பதை சரிபார்க்கலாமே தவிர, கையெழுத்து உண்மையானதா, ஃபோர்ஜரியா என்பதை நீதிமன்றம்தான் சரிபார்க்க முடியும் என்று கூறுகிறார். அதாவது கையெழுத்து போட்டவர்கள் அது எங்கள் கையெழுத்து இல்லை என்று கூறுவதை எதை வைத்து அவர் சரிபார்க்கிறார் என்பதே கேள்வி. இப்படி அவர்கள் கூற்றை ஏற்று வேட்புமனுக்களைத் தள்ளுபடி செய்ய முடியுமா என்று கேட்கிறார்.

இரண்டாவது முக்கியமான கேள்வி, வாக்காளர்களுக்கு முன் மற்றொரு தேர்வும் இருக்கிறது என்பதுதான். அது நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் என்ற சாத்தியம். அதாவது None Of The Above என்பதன் சுருக்கமே NOTA. மேலேயுள்ள யாருக்கும் நான் வாக்களிக்கவில்லை என்று வாக்காளர்கள் கூறலாம். மின்னணு எந்திரத்தில் இந்த வாய்ப்பு 2013ஆம் ஆண்டுதான் சேர்க்கப்பட்டது. இதன்படி பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலை எதிர்த்து யாரும் போட்டியிடாவிட்டால்கூட, வாக்காளர்கள் அவருக்கு தாங்கள் வாக்களிக்கவில்லை என்று நோட்டாவிற்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மை வாக்குகள் நோட்டாவிற்கு பதிவானால் அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் நோட்டாவின் நோக்கம்.

இதன்படி பார்த்தால் முகேஷ் ஜலால், நோட்டா ஆகிய இரண்டு சாத்தியங்களுடன் மின்னணு இயந்திரங்களை வைத்து தேர்தல் நடத்தியிருக்க வேண்டும் என்பதே முறையானது. ஆனால், நோட்டா சேர்க்கப்படுவதற்கு முன் எழுதப்பட்ட தேர்தல் விதிகளைப் பயன்படுத்தி மாவட்ட தேர்தல் அதிகாரி முகேஷ் ஜலால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது செல்லாது என்பதே வாதம். 

சில மாதங்களுக்கு முன்னால் சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் அதிகாரி எதிர்க்கட்சி வாக்குகளை எல்லாம் செல்லாத வாக்குகளாக்கி பாஜக வேட்பாளரே வென்றதாக அறிவித்ததை மறக்க முடியாது. அவரது செயல் சிசிடிவி கேமராவில் பதிவானதால், உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்து அந்த வாக்குகளைச் செல்லும் எனத் தீர்ப்பளித்து எதிர்க்கட்சி வேட்பாளரை வென்றதாக அறிவித்தது.

சூரத்தில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள் அனைவரையும் களத்திலிருந்து அகற்றி, அவரை போட்டியின்றி தேர்ந்தெடுத்திருப்பது மக்களாட்சி விழுமியங்களை முற்றிலும் சீர்குலைப்பது ஆகும். இந்த வழக்கம் நிச்சயம் உச்ச நீதிமன்றம் செல்லும் என்பதில் ஐயமில்லை.

democratic values are rapidly decaying

விழுமியங்கள் சிதைவு 3: எல்லா முரண்களையும் உச்ச நீதிமன்றமே தீர்க்குமா?  

மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இரண்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஒன்றிய அரசையும், மாநில அரசையும் வெவ்வேறு கட்சிகள் ஆளலாம். ஆனால், அரசாட்சி என்பது கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆனால், பாஜக 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுடன் அதற்கு முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. மீண்டும் 2019ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஒன்றிய அரசுப் பொறுப்பை ஏற்ற பிறகு முரண்கள் கூர்மையடையத் தொடங்கின. உரையாடல், பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது சாத்தியமற்றுப் போகிறது.

மாநிலங்களுக்குக் குறிப்பிட்ட செலவினங்களுக்காக நிதியை பகிர்ந்தளிக்க ஒன்றிய அரசு மறுப்பதால் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மாநில சட்டமன்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டின. உச்ச நீதிமன்றம் ஆளுநர்களை கண்டித்து இதுபோன்ற வழக்குகளுக்கு இடம் தராமலிருக்கும்படி கூறியுள்ளது.

இப்போது ஒன்றிய அரசுடனான மாநில அரசுகளின் முரண்களையெல்லாம் உச்ச நீதிமன்றம்தான் தீர்க்க வேண்டும் என்றால் மக்களாட்சி என்பதன் பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் உச்ச நீதிமன்றம் எடுத்து நடத்த முடியுமா என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு ஓர் அசாதாரண சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.

பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க தமிழ்நாடு அரசு இருபத்தெட்டாயிரம் கோடி நிதி கேட்டால், ஒன்றிய அரசு இருநூற்று நாற்பது கோடி தருகிறது. எந்த அடிப்படையில் இப்படிக் குறைத்து தருகிறது என்பது தெரியவில்லை. மாநில முதலமைச்சர் கொந்தளித்து அறிக்கை விடுக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு அவருடைய பேச்சுக்கு மதிப்பளித்து உரையாடலில் ஈடுபடுவதில்லை. காரணங்களை பொதுமன்றத்தில் கூறுவதில்லை.

மக்களை நேரடியாகப் பாதிக்கும் பேரிடர் நிவாரணம் போன்ற விஷயங்களில் ஒன்றிய அரசு அக்கறையுடன் நடந்துகொள்வது மக்களாட்சிக்கு இன்றியமையாதது. மக்கள் நலன் பேணுவதில் அரசியல் கட்சி மாறுபாடுகள் தலையிட அனுமதிக்கக் கூடாது. தேசியப் பேரிடர் நிதியை பகிர்ந்தளிப்பதற்கான விதிமுறைகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். அந்த நிதி மக்களின் உரிமையே தவிர, யாசகம் அல்ல. இது போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கருத்து மாறுபாடுகள் தோன்றுவதும், மக்களின் கேள்விகளுக்கு விடைகளை ஒன்றிய அரசு அளிக்காமலிருப்பதும், மக்களாட்சியை மன்னராட்சியாக மாற்றுவதாக ஒருவர் கருதினால் அது வியப்பிற்குரியதல்ல.  
 

கட்டுரையாளர் குறிப்பு:

democratic values are rapidly decaying by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் பிஸ்கட்

IPL 2024 : அபார வெற்றி… ஹைதராபாத் அணியை பழி தீர்த்தது சென்னை!

“என்னது ரேஷன்ல கோதுமை பீரா?”: அப்டேட் குமாரு

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு ரெடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share