ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் இன்று (ஜனவரி 6) காலை 10 மணிக்குத் துவங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை இனிய காலை வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி ஆரம்பித்தார். அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம், உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் குறித்து பேச முயன்றார். ஆளுநர் அமரச் சொல்ல, ஸ்டாலின் தொடர்ந்து உரையாற்றினார்.
இதனையடுத்து உரையாற்றுவதை நிறுத்திய ஆளுநர், “எதிர்க்கட்சித் தலைவர் ஒரு நிமிடம் என்னுடைய பேச்சைக் கேட்க வேண்டும். நான் புதிதாக பதவியேற்று இங்கு வரவில்லை. இரண்டு வருடங்களாக இங்குதான் இருக்கிறேன். எனக்கு அனைத்தும் நன்றாகவே தெரியும். நீங்கள் மிகப்பெரிய பேச்சாளர். இந்த அவை விவாதம் புரிவதற்குத்தான். உங்கள் பேச்சு திறமையை நீங்கள் காண்பியுங்கள். நான் உரையாற்றி முடித்த பிறகு அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம்” என்று தெரிவித்தார். எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக உறுப்பினர் அனைவரும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “தமிழகத்தின் கடன் சுமை 4 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது, தொழில் வளர்ச்சி இல்லை, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கவில்லை, அதிமுக ஆதரித்ததால் நிறைவேற்றப்பட்ட சிஏஏவால் சிறுபான்மையினருக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது, உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் நடந்துகொண்டது, நீட் விவகாரம் ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம். ஆளுநர் உரையால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்பதால், கூட்டத்தை புறக்கணித்தோம்” என்று தெரிவித்தார்.
