கவுண்டமணி. தமிழ் திரையுலகம் கண்ட எத்தனையோ நகைச்சுவை, குணசித்திர நடிகர்கள், நாயகர்களில் ஒருவர். ஆனால், அவரது நடிப்பு பாணியும் வசனம் பேசும் விதமும் உடல்மொழியும் பிற கலைஞர்களால் பிரதி எடுக்க முடியுமே தவிர, அவரை மிஞ்சும் அளவுக்குத் திறம்படச் செய்ய இயலாது. காரணம், அதுதான் கவுண்டமணியின் ‘ஒரிஜினாலிட்டி’. அது நாடகங்களில் நடித்து, அப்போதிருந்த வறுமையான சூழலைக் கடந்து, அதன் வழியே வாழ்க்கையையும் மனிதர்களையும் படித்ததனால் வந்தது. goundamani birthday special article may 25
அந்த அனுபவமே, சுப்பிரமணியனாக இருந்த அவரை ‘கவுண்டர்’ மணியாக நாடக மேடைகளில் கவனிக்க வைத்தது. ’பத்த வச்சுட்டியே பரட்டை’ வழியாக ‘பதினாறு வயதினிலே’வில் அவருக்கு ‘அடையாளம்’ தந்தது.

சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி படங்களில் ‘துண்டு துக்கடா’ பாத்திரங்களில் வந்து போனதில் இருந்து திரை வாழ்வைத்தொடங்கியவர் கவுண்டமணி. பிறகு தேனும் பாலும், பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் படங்களில் நடித்தார்.
மேற்சொன்னவற்றில் பாரதிராஜா படங்களில் கவுண்டமணி இடம்பெறக் காரணமாக இருந்தவர் கே.பாக்யராஜ். அப்போது அவர் உதவி இயக்குனராக அப்படங்களில் பணியாற்றினார்.
பிறகு தான் இயக்குனராக அறிமுகமான ‘சுவரில்லா சித்திரங்கள்’ படத்தில் காளியண்ணன் எனும் தையல்காரராக நடிக்க வைத்தார். அந்த படத்தில் கவுண்டமணி நடிகை சுமதியைப் பார்த்துச் சொல்கிற ‘சரோசா.. குப்பை கொட்டுறியா.. கொட்டு.. கொட்டு..’ வசனம் அந்நாட்களில் பிரபலமான ஒன்று.
பிறகு குடும்பம் ஒரு கதம்பம், நெற்றிக்கண், மலையூர் மம்பட்டியான் என்று கவுண்டமணியின் ‘கிராஃப்’ எகிறியது.
ஆர்.சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் செந்தில் உடன் இணைந்து நடித்தார் கவுண்டமணி. அதில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பாத்திரத்தில் தோன்றினார்.

அப்படத்திற்குப் பிறகு, கவுண்டமணி – செந்தில் இருவரும் ஹாலிவுட்டின் லாரல் -ஹார்டி ஜோடிக்கு இணையான புகழைப் பெற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர்.
‘வைதேகி காத்திருந்தாள் ‘ படத்தில் வருகிற பல நகைச்சுவை வசனங்கள் மீம்ஸ்களில் இடம்பெறுபவையாக உள்ளன. அவற்றை தாங்கி டிசர்ட்கள் வடிவமைக்கப்படுகின்றன. இயல்பு வாழ்வில் மனிதர்களின் உரையாடலிலும் கூட அவை வெளிப்படுகின்றன. கவுண்டமணி பேசிய பல வசனங்கள் அத்தகையவை என்றாலும், இதில் வருகிற ‘பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா, இந்த பந்தம் கிந்தம்லாம் வச்சுக்க மாட்டீங்களா’ வசனம் ரொம்ப பிரபலம்.

அதன்பிறகு ‘ரீல் அந்து போச்சுடா சாமி..’, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ‘சந்துருன்னு ஒரு மானஸ்தன் இங்க இருந்தானே, அவனை தேடுறேன்’, ’என்ன பார்த்து ஏண்டா அந்த கேள்விய கேட்டே’, ‘அது என்ன மாப்பு கொஞ்சம் கூட வெட்கப்படாம பேசிட்ட’, ‘ஏம்பா அந்த கண்ணாடிய நீ கழட்ட மாட்டியா’, ‘வாங்க ஏழைங்களா வாங்க’ என்பது உட்படப் பல ‘பஞ்ச்’கள் கவுண்டமணியால் பிரபலம். இப்படங்களில் இது போலப் பல வசனங்களை உதாரணம் காட்ட முடியும்.
சில வசனங்கள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தில் கூட இருந்திருக்கின்றன. அவற்றையும் படத்தின் கதையோட்டத்திற்கு, கதாபாத்திரங்களின் இயல்புக்குத் தகுந்தவாறு சேர்த்துவிட்டிருக்கிறார். நாயகனாக, வில்லனாக, குணசித்திர பாத்திரமாகத் திரையில் மிளிர்ந்திருக்கிறார். அடுத்தடுத்து பல படங்களில் இப்படித் தோன்றியவர், ஒருகட்டத்திற்கு மேல் நாயகனுக்கு இணையாகவும் திரையில் வந்தார். ’உள்ளத்தை அள்ளித்தா’ போன்ற படங்கள் அதற்கான உதாரணங்கள்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், அர்ஜுன், பிரபு, சரத்குமார் என்று தொண்ணூறுகளில் முன்னணியில் இருந்த, அதன் பின் இரண்டாம் நிலையில் இருந்த அத்தனை நாயகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் கவுண்டமணி. அவர்களது பாத்திரங்களை வாருகிற மாதிரி ‘டயலாக்’ பேசியிருக்கிறார்.
இப்போது அப்படங்களைப் பார்த்தால், கவுண்டமணி இல்லாமல் போயிருந்தால் அந்த காட்சிகள் அனைத்தும் கேலிக்குரியதாக மாறியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதனைப் படம்பிடிக்கிறபோதே கிண்டலடித்த காரணத்தால், அக்காட்சிகள் சாகாவரம் பெற்றிருப்பதை உணர முடியும். அதுதான் கவுண்டமணியின் பலம்.
இன்று, இந்த உத்தியைத் தொலைக்காட்சிகளில் பல நகைச்சுவையாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.

எண்பதுகளில் நடித்த சுருளிராஜனைக் கவுண்டமணி பிரதியெடுத்ததாகச் சொல்வார்கள். அதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. அவரைப் போலவே, எளிய மனிதர்களை நகைச்சுவை கதாபாத்திரங்களாக மாற்றியவர் கவுண்டமணி. அந்த கிண்டலும் கேலியும் எகத்தாளமும் கூட அப்படித்தான் இருக்கும்.
ஆனால், ஒருவிதமாகப் பயந்த தொனியில் அந்த வசனங்களைப் பேசுவார் சுருளிராஜன். ‘வெளியே தைரியம் உள்ளே பயம்’ என்று பந்தா காட்டுகிற தொனியில் பேசுவது கவுண்டமணியின் பாணி.
அவரது பாணியில் ‘அண்ணே.. ஹேப்பி பொறந்த டே’ என்று வாழ்த்து சொன்னால் அவர் நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டார்.
வழக்கமாகவே, ரசிகர்களைச் சந்திக்கிற வழக்கம் அவருக்குக் கிடையாது. படம் தொடர்பான நிகழ்ச்சிகளில், விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார். பேட்டிகள் ஊடகங்களுக்குத் தரமாட்டார்.
இந்த ஆண்டு தனிப்பட்ட வாழ்வில் அவர் இழப்பை எதிர்கொண்டிருக்கிறார்.
கவுண்டமணியை ‘கவுண்டர் மகான்’ ஆக போற்றுகிற பல ரசிகர்களுக்காக, இந்த பிறந்தநாள் வாழ்த்து விடுக்கப்படுகிறது.
எத்தனையோ கடினமான சூழல்களில் அவர்களைச் சிரிக்க வைத்து நம்பிக்கை பாதைக்குத் திசை திருப்பியது அவரது நகைச்சுவைதான். அதனை எதிர்கொண்டவர்கள், இன்றும் தங்களது வாழ்வின் சோகமான, சுகமான தருணங்களில் அவரது ‘காமெடி கவுண்டர்’களை தங்களது வாழ்வுடன் பொருத்திப் பார்ப்பார்கள். கவுண்டமணியைச் சிலாகிப்பார்கள். அவர்களுக்காகவே, மேற்சொன்ன ‘டைட்டில்’!