திராவிடர் கழகம் வழங்கிய விருதை திருப்பி அளித்த கோபி நயினார்… என்ன காரணம்?

Published On:

| By Kumaresan M

‘அறம்’ திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் தனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று இயக்குனர் கோபி நயினார் இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கியவர் கோபி நயினார். இவர், சமீபத்தில் நீலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இயற்கை வளங்களை சூறையாடுபவர்களை கண்டிப்பவர்களை அரவணைக்க வேண்டுமா? அல்லது வழக்கு போட்டு அச்சுறுத்த வேண்டுமா? திராவிடமெனும் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறீர்கள். பாஜக சனாதானம் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறான்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, பெரியாரிஸ்டுகள் கோபி நயினாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது,

“தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன். தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது.gopi nainar clash with periyarist

இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது. தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை .

இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்தியா முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாட்டாளர்கள் , கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தின் கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருதுயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.gopi nainar clash with periyarist

நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது . அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது , என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு செயல்படுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share