உக்ரேன் அகதிகளுக்கு 30000 பிக்சல் செல்போன்கள் வழங்கிய கூகுள்

Published On:

| By admin

உக்ரேன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வரும் அகதிகளுக்கு தங்களால் முடிந்தவரை தொழில்நுட்ப, பொருளாதார உதவிகளை செய்வதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் 30 ஆயிரம் உக்ரேன் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பிக்சல் செல்போன்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஏற்கனவே ஜூன் 20ஆம் தேதியன்று இருபதாயிரம் பேர் செல்போன்களை உக்ரேன் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது.

கடந்த மே மாதம்தான் கூகுள் உக்ரைன் சப்போர்ட் ஃபண்ட்ன் கீழ் 17 பயனாளிகள் உறுதி செய்யப்பட்டனர். இந்த பயனாளிகள் தங்கள் ஸ்டார்ட்-அப்களை தொடங்க கூகுள் நிறுவனத்திடமிருந்து நிதியுதவிகளை பெறுவார்கள். மேலும் அவ்வப்பொழுது இந்த பயனாளிகளுக்கு கூகுள் நிறுவனம் சார்பாக தொழில் நடத்தும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும்.

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனிப்பட்ட சார்பில் உக்ரேன் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை தானமாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், “உக்ரேன் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள், அமெரிக்காவில் வாழும் நாட்களை தங்கள் வீட்டில் இருப்பதை போல் உணர வைக்க வேண்டும். ஆகையால் மேலும் 30 ஆயிரம் பிக்சல் செல்போன்களை அகதிகளுக்கு நன்கொடையாக கூகுள் நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் அகதிகள் அமெரிக்கர்களிடம் எளிதாக தொடர்பு கொள்வதற்கு கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தலாம். தங்கள் சொந்த நாடுகளை விட்டு அமெரிக்காவுக்கு தஞ்சம் வரும் அகதிகளுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய கூகுள் நிறுவனம் தயாராக உள்ளது.” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share