நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி சந்தையில் போட்டியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது காலப்போக்கில் மேலும் அதிகரிக்கும் என்பதால் பெரு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தங்கள் கவனத்தை திரும்பி உள்ளன.
இதன் ஒரு பகுதியாக பிரபல கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் அந்நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
AI-இன் முக்கியத்துவம்!
AI தொழில்நுட்பம் இன்றைய தொழில்நுட்ப உலகில் மிக முக்கியமான ஒரு கருவியாக உள்ளதாகக் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிடுகிறார். இதனால் AI மூலம் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் உள் செயல்பாடுகளை மேம்படுத்துவதன் மூலம் கூகுள் தனது போட்டித்தன்மையை உறுதிப்படுத்த முயல்கிறது. உதாரணமாக, AI-ஐப் பயன்படுத்தி தேடுபொறி முடிவுகளை மேம்படுத்துதல், பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் விளம்பரங்களை திறமையாக வழங்குதல் போன்றவை கூகுளின் முக்கிய இலக்குகளாக உள்ளன.

அதிகரிக்கும் முதலீடு!
இதன் காரணமாக 2025ல் மட்டும் கூகுள் இதில் 10 பில்லியன் டாலர் கூடுதலாக செலவிட திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 85 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு பெரும்பாலும் AI-க்கு தேவையான உள்கட்டமைப்பு, அதாவது தரவு மையங்கள் மற்றும் கணினி வளங்களை விரிவாக்குவதற்கு பயன்படுத்தப்படலாம். AI மாதிரிகளை இயக்குவதற்கு பெரிய அளவிலான கணினி சக்தி மற்றும் சேமிப்பு தேவைப்படுகிறது. இதற்காக தரவு மையங்களை உருவாக்குவது அவசியமாகிறது.
ஊழியர்களின் பங்கு!
மேலும் கூகுள் ஊழியர் AI கருவிகளை தங்கள் அன்றாட பணிகளில் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதனால் வேலையின் வேகம் மற்றும் திறன் அதிகரிக்கும். உதாரணமாக AI-ஆல் இயக்கப்படும் கருவிகள் மூலம் தரவு பகுப்பாய்வு, மென்பொருள் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை போட்டி!
கூகுள் மட்டுமல்லாமல், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் AI-இல் பெரிய அளவில் முதலீடு செய்கின்றன. உதாரணமாக, அமேசான் தனது AWS (Amazon Web Services) மூலமும், மைக்ரோசாஃப்ட் தனது Azure மற்றும் OpenAI உடனான கூட்டாண்மை மூலமும் AI-ஐ முன்னெடுக்கின்றன. இந்த போட்டி சூழலில், கூகுள் தனது முன்னணி இடத்தை தக்கவைக்க முயற்சி செய்து வருகிறது.
நீண்டகால தாக்கம்!
கூகுளின் இந்த அதிகப்படியான முதலீடும், AI-இன் பயன்பாடும் கூகுளின் தயாரிப்புகளை மேம்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை. பொருளாதாரம் மற்றும் சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் AI மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றாலும் சில பாரம்பரிய வேலைகள் ஆட்டோமேஷனால் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் உள்ளது.
கூகுளின் இந்த முயற்சி, AI தொழில்நுட்பத்தில் தனது உலகளாவிய தலைமைத்துவத்தை பராமரிக்கவும், முன்னோடியாக திகழவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
